2015-01-20 15:18:00

கடுகு சிறுத்தாலும் - கண்ணீர் விடுபவரும், கனவு காண்பவரும்...


குழந்தைகள் மனநல மருத்துவர் ஒருவருக்கு, இரட்டைப் பிறவிகளாய் இரு மகன்கள் பிறந்தனர். ஒரு மகன், நேர்மறை எண்ணங்களுடன், அனைத்தையும் நம்பிக்கையோடு நோக்கும் சிந்தனை கொண்டிருந்தான். மற்றொரு மகனோ, அனைத்தையும் எதிர்மறையாய், நம்பிக்கையின்றி பார்க்கும் சிந்தனை கொண்டிருந்தான்.

இருவருக்கும் பிறந்தநாள் வந்தபோது, நம்பிக்கையற்ற மகன் அறையில் பல விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் குவித்தார் தந்தை. நேர்மறை எண்ணங்களும், நம்பிக்கையும் கொண்ட மகனின் அறையிலோ, ஒரு கூடை நிறைய குதிரைச் சாணத்தை வைத்தார்.

சிறிது நேரம் சென்று, இருவரின் அறைக்கும் தந்தை சென்றபோது, நம்பிக்கையற்ற மகன் விளையாட்டுப் பொருள்களுக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு அழுதுகொண்டிருந்தான். அவனிடம் தந்தை காரணம் கேட்டபோது, "இத்தனை பொம்மைகளும் எப்படியும் ஒருநாள் உடைந்துபோகுமே என்பதை நினைத்து அழுகிறேன்" என்று கண்ணீரோடு சொன்னான்.

தந்தை அவனை ஒருவாறு தேற்றிவிட்டு, அடுத்த மகனின் அறைக்குச் சென்றார். அங்கு, சாணம் நிறைந்த கூடையைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்த மகனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவனிடம் காரணம் கேட்டபோது, அவன், "இவ்வளவு குதிரைச் சாணம் இங்கிருக்கிறதென்றால், கட்டாயம் ஒரு குதிரையும் எங்கோ மிக அருகில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?" என்று சிரித்தபடியே சொன்னான்.

காண்பதைக் கொண்டு கண்ணீர் விடுபவர்களை விட, காணாதவற்றை கனவு காண்பவர்களோடு கைகுலுக்க, கதிரவன் ஒவ்வொரு நாளும் உலகை வலம் வருகிறான். 








All the contents on this site are copyrighted ©.