2015-01-20 15:45:00

எஞ்சியுள்ள தாள்களை மட்டுமல்ல,மனிதர்களையும் தூக்கி எறிகிறோம்


சன.20,2015. இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளின் திருத்தூதுப்பயண நிகழ்வுகளில் தான் மக்களிடம் கண்ட சாட்சிய வாழ்வின் அடையாளங்களும், ஆசீர்பெறுவதற்காக, பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, தந்தையர் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக் காட்டியது போன்ற செயல்களும் தனது கண்களில் கண்ணீரை வரவழைத்தன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திங்களன்று பிலிப்பீன்சிலிருந்து உரோமைக்குத் திரும்பிய ஏறக்குறைய 15 மணி நேர விமானப் பயணத்தில், அவரோடு பயணம் செய்த பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் குடும்பம், கருத்தியல் காலனி ஆதிக்கம், மனித வாழ்வின் மேன்மை, பெற்றோரின் பொறுப்பான வாழ்வு, ஊழல், இஸ்லாமியப் பயங்கரவாதம், மால்தூசியக் கோட்பாடு, சீனா, தலாய்லாமா போன்ற தலைப்புக்களில் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிலாவில் ஏறக்குறைய எழுபது இலட்சம் மக்கள் திருப்பலியில் கலந்து கொண்டது பற்றிக் குறிப்பிட்டதைவிட, தக்லோபான் பற்றி அதிகம் பேசிய திருத்தந்தை, இப்பகுதியில் இடம்பெற்ற கடுமையான இயற்கைப் பேரிடர் பாதிப்புக்குப் பின்னரும் மக்கள் தங்கள் பாவங்களை நினைத்துச் செபித்தது, காணிக்கைகளை வழங்கியது, இன்னும், மனிலாவில் முன்னாள் தெருச்சிறார் பகிர்ந்துகொண்டது போன்றவை என்னை பேச இயலா நிலைக்கு வைத்தன என்று கூறினார்.

இந்த இரு நாடுகளுக்கும் ஏழ்மை பற்றிய செய்தியைக் கொண்டுசெல்ல விரும்பியதாகவும், இக்காலத்தில் எஞ்சியுள்ள தாள்களை மட்டுமல்ல, மனிதர்களையும் நாம் தூக்கி எறிகிறோம், மனிதர்களைத் தூக்கி எறிவது, பாகுபாடாகும் எனவும் கூறினார் திருத்தந்தை.

உரோமையில் தலாய் லாமா அவர்களைச் சந்திக்காதது, சீனாவுடன் உறவு பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, உரோமையில் அனைத்துலகக் கூட்டங்களில் தலைவர்கள் பங்கேற்கும்போது, அத்தலைவர்களைச் சந்திப்பது திருப்பீடச் செயலகத்தின் நடைமுறையில் கிடையாது என்றும் கூறினார்.

சீன அரசு நாகரீகமாக நடந்து கொள்கிறது, நாங்களும் நாகரீகமாக நடந்து கொள்கிறோம், ஆயினும், நான் சீன அதிகாரிகளைச் சந்திப்பதற்கு விருப்பமாக உள்ளேன் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.