2015-01-19 15:42:00

வாரம் ஓர் அலசல் - வருங்காலத் தலைமுறைக்கு வளமான பூமி


சன.19,2015. அன்பு இதயங்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கையிலும், பிலிப்பீன்சிலும் மேற்கொண்ட திருத்தூதுப் பயண நிகழ்வுகள் பற்றி கடந்த ஒரு வாரமாக நம் நிகழ்ச்சிகளில் கேட்டுவந்தோம். இந்நாடுகளில் பயண நிகழ்வுகளை சிறப்பாக நிறைவு செய்து இத்திங்கள் பிலிப்பீன்ஸ் நேரம் காலை பத்து மணிக்கு, இந்திய நேரம் இத்திங்கள் காலை 7.30 மணிக்கு அந்நாட்டிலிருந்து புறப்பட்டார் திருத்தந்தை. கடந்த ஆண்டு ஆகஸ்டில் தென் கொரிய மக்களின் அன்பு மழையில் நனைந்த திருத்தந்தை, ஆசிய மக்கள்மீது கொண்டிருக்கும் அன்பாலும் அக்கறையாலும் மீண்டும் ஓர் ஆசியப் பயணத்தை இந்த 2015ம் ஆண்டின் முதல் மாதத்திலேயே ஆரம்பித்து நிறைவு செய்துள்ளார். இந்தப் பயணங்களின்போது திருத்தந்தை அழுத்தம் கொடுத்துப் பேசிய முக்கிய தலைப்புகளில், இறைவனின் படைப்பைப் பாதுகாக்க வேண்டுமென்பதும் ஒன்றாக இருந்தது. இஞ்ஞாயிறு காலையில் மனிலாவின் ரிசால் பூங்காவில் ஏறக்குறைய எழுபது இலட்சம் மக்களுக்குத் திருப்பலி நிகழ்த்தியபோது, ஏழைகளுக்கு உதவுதல், குடும்பத்தின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்று தலைப்புக்களில் கவனம் செலுத்தி திருத்தந்தை மறையுரை ஆற்றினார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இளையோர் மிகுந்த கவனம் செலுத்துமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். உலக வெப்பநிலை மாற்றத்தால், பிலிப்பீன்ஸ் நாடு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடுவதற்கு திருத்தந்தை மறக்கவில்லை.

7,107 தீவுகளைக் கொண்ட பிலிப்பீன்ஸ் நாட்டில் புயலும், கனமழையும், கடும்காற்றும் அடிக்கடி ஏற்பட்டு மக்களைப் பாதித்து வருகின்றன. ஏன், Leyte தீவின் தக்லோபான் நகரில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் இச்சனிக்கிழமை மாலை வரை நடைபெறுவதாய் பயணத் திட்டத்தில் இருந்தது. ஆனால் அன்று, கனத்த மழையுடன்,  மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய Mekkhala வெப்பமண்டலப் புயலால், அன்று மதியம் ஒரு மணிக்கே திருத்தந்தை திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து மனிலா திரும்பிவிட்டார் என்பது நமக்குத் தெரியும். அன்று தக்லோபான் செல்லவிருந்த கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. தீவுக்கூட்டங்களால் ஆன பிலிப்பீன்சில் ஓர் இடத்திலிருந்து அடுத்த இடத்திற்குச் செல்வதற்கு சிறிய கப்பல் பயணங்களையே மக்கள் மேற்கொள்கின்றனர். அன்பு நெஞ்சங்களே, கடந்த வார உலகின் நிலைமையை அறிவதற்காக, இணையத்தள ஊடகங்கள் வழியாக ஒருமுறை வலம் வந்தோம். இப்புவி வெப்பமடைந்து வருவது, பிலிப்பீன்ஸ் நாட்டை மட்டுமல்லாமல் உலகில் பல நாடுகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது என்பதை அறிய முடிந்தது.

இந்நாள்களில் பல நாடுகளில் பெருவெள்ளம், புயல். கடந்த வாரத்தில் ஆசியாவின் லெபனன், ஆப்ரிக்காவின்  மலாவி, மொசாம்பிக், போன்ற நாடுகளில் கனமழை. இதனால் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கில் மலாவியில் மட்டும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். எல்லா இடங்களிலும் கரைபுரண்டோடும் வெள்ளம் அறுவடையைச் சேதப்படுத்தி, வீட்டுவிலங்குகளையும் அடித்துச் சென்றுள்ளது. சனவரி 13, கடந்த செவ்வாயன்று மலாவி அரசு அவசரகால நெருக்கடிநிலையை அறிவித்துள்ளது. இப்பூமி மேலும் மேலும் வெப்பமடைந்து வருவதால் நாடுகள் இப்படி இயற்கைச் சீற்றங்களின் கோர விளைவுகளை அனுபவித்துவரும்வேளை, இப்புவியில் அதிகவெப்பமான ஆண்டாக, 2014ம் ஆண்டு, இருந்ததென அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிவியலாளர்கள் கடந்த வெள்ளியன்று தங்களின் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் மக்கள் நிலத்தடி எரிபொருட்களைப் பயன்படுத்தி பசுமைஇல்ல வாயுக்களைக் காற்றில் கலக்கச் செய்து சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்ததால் 2014ம் ஆண்டு, அதிகமான வெப்பமடைந்த ஆண்டாக இருந்தது எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இப்புவி அதிக வெப்பமடைவதற்கு 95 விழுக்காடு மனித நடவடிக்கைகளே காரணமாக இருக்கலாம் என்றும் ஐ.நா. வானிலை நிறுவனம்(WMO)கூறியுள்ளது. 19ம் நூற்றாண்டு முழுவதும் 1997ம் ஆண்டிலிருந்து 10 ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகளாக இருந்தன என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2014ம் ஆண்டில் அதிக வெப்பநிலை, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உட்பட வடக்கு ஆப்ரிக்கா, அமெரிக்காவின் மேற்குப் பகுதிவரை நீண்டிருந்தது. மேற்கு அலாஸ்கா தீவுகளிலிருந்து இரஷ்யாவின் கிழக்கு வரை தென் அமெரிக்காவின் உள்நாட்டுப்  பகுதிகளிலும், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோர ஆஸ்திரேலியாவிலும், இன்னும் ஆஸ்திரேலியாவின் வேறு சில இடங்களிலும் வெப்பம் அதிகமாக இருந்தது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு நாடாகிய கிரீண்லேண்ட்டில், பனிமலைப் பாறைகள் உருகிக்கொண்டிருப்பதால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் கடலோர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் வருகிற டிசம்பரில் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பாரிசில் நடத்தும் உச்சி மாநாட்டில், புவிவெப்பமாதலைத் தடுப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மாற்றிக்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1880களிலிருந்து பூமியின் மேல்பரப்பின் சராசரி வெப்பநிலை 0.8.டிகிரி செல்சியசாக இருந்தது. 20ம் நூற்றாண்டிற்குப் பிறகான சராசரி வெப்பநிலையாக, உலகம் முழுவதும் நிலப்பகுதிகள் மற்றும் பெருங்கடல்களின் மேல்பரப்பின் சராசரி வெப்பநிலை 0.69 டிகிரி செல்சியசாக உயர்ந்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும்(Nasa), அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமான நோயாவும் (NOAA) தெரிவிக்கின்றன. இப்புவி வெப்பமடைந்து வருவது ஒருபுறமிருக்க, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள ஐஸ்லாந்து நாட்டில் பூமிக்கடியில் மின்சாரம் கிடைக்கின்றது என்று அந்நாட்டு அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நாடு ஏற்கனவே 70 விழுக்காடு ஆற்றலை புவிவெப்ப ஆதாரங்களில் இருந்துதான் பெறுகிறது. தற்போது 2,100 மீட்டர் ஆழத்தில் சூடான, உருகிய பாறைக்குழம்பு(மக்மா), 900 முதல் 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் நீராவியை உருவாக்கியதை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இந்தப் பாறைக்குழம்பு உருகும் நிலையைக் கட்டுப்படுத்தி எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்கலாம் என ஐஸ்லாந்து நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. ஐஸ்லாந்து அறிவியலாளர்களின் இந்த எதிர்பாராத கண்டுபிடிப்பு, உலகின் முதல் புவிவெப்ப ஆற்றல் மையத்தை உருவாக்கக் காரணமாகியுள்ளது.

இந்தியாவில் மக்களின் பயன்பாட்டால் 41 விழுக்காட்டுக் காடுகள் அழிவின் விளிம்பில் உள்ளன என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு காடுகள் அழிவுதான் முக்கியக் காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக இருக்கும் தண்ணீர்ப் பிரச்சினை இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 1951ம் ஆண்டு இந்தியாவின் தனிநபர் தண்ணீர்ப் பயன்பாடு 15,531 கன அடியாக இருந்தது. இதுவே 2011-ம் ஆண்டில் 4,635 கன அடியாகச் சரிந்து விட்டது. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க காடுகள் சுருங்கி, தண்ணீர் ஆதாரம் வெகுவாகக் குறைந்து வருகிறது. தண்ணீரின் அத்தியாவசியம், காடுகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் சனவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை, தேசிய தண்ணீர் வாரமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் எல்லா இயற்கை ஆதாரங்கள் மூலம் ஆண்டுக்கு 12 இலட்சம் கோடி கன அடி தண்ணீர் கிடைக்கிறது. இதில் 2.10 இலட்சம் கோடி கன அடி தண்ணீர் ஆவியாகி விடுகிறது. 2.10 கோடி கன அடி தண்ணீர் நிலத்தின் வழியில் செல்லும்போது வீணாகிறது. ஒவ்வோர் ஆண்டும் மிகப்பெரிய அளவில் 4.5 இலட்சம் கோடி கன அடி தண்ணீர், வெள்ளம் காரணமாக கடலில் கலக்கிறது. மீதமுள்ள 3.3 இலட்சம் கோடி கன அடி தண்ணீரை வைத்தே விவசாயம், குடிநீர் ஆதாரம் மற்றும் தொழிற்சாலைக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டில் தமிழகத்தில் 823 மி.மீ. மழை பெய்தும், நிலத்தடி நீர்மட்டம் அதாள பாதாளத்துக்கு சென்றுவிட்டது. நான்கு ஆண்டுகாலமாக இருந்த வறட்சியால் தற்போது மழை பெய்தும் நிலத்தடி நீர்மட்டம் உயரவில்லை. இந்தியாவில், சிரபுஞ்சியில் ஆண்டில் 365 நாட்களும் மழை பெய்யும். அங்குகூட 17 விழுக்காடு முதல் 20 விழுக்காடு மழையளவு குறைந்து, கடந்த ஓராண்டில் 25 முதல் 30 நாட்கள் மழை பெய்யவில்லை. வறண்ட காற்றை இயக்கும் உந்து சக்தியாக இருக்கக்கூடிய மரங்களின் அடர்த்தி குறைந்துவிட்டது. விவசாயத்துக்குப் பயன்படுத்தும் தண்ணீரை முறையாக பயன்படுத்தாததால் 60 விழுக்காடு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது.

இதுதான் இக்கால நிலை. நுகர்வு கலாச்சாரத்தில் வாழ்ந்து வரும் நாம் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தப் பழக வேண்டும். அளவறிந்து வாழாதான் வாழ்க்கை, உளபோல, இல்லாகித் தோன்றாக் கெடும் என்றார் வள்ளுவர். எந்தப் பொருளையும் வீணாக்கி விடாமல் இருப்பது நல்ல பழக்கம். தண்ணீர் தாராளமாகக் கிடைக்கின்றது என்பதற்காக அதை வீணாக்கலாமா?. சிலர் தண்ணீரைக் குழாயில் திறந்துவிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருப்பர், சிலர் குழாயைத் திறந்தால் அதை அடைக்க மறந்து விடுவார்கள். அதுவும் பொதுச் சொத்து என்றால் கேட்கவே வேண்டாம்.

ஜான் வெஸ்லி என்ற ஒரு பெரும் செல்வந்தர் இங்கிலாந்தில் சில கிராமப் பகுதிகளில் குப்பைக்கூளங்களும், புதர்களும் மண்டிக்கிடப்பதையும், மக்கள் வறுமையில் பசியால் வாடுவதையும் கண்டு வருந்தினார். நன்றாகச் சிந்தித்த வெஸ்லி, அந்தக் கிராமங்களுக்குச் சென்று பல செடி கொடிகளின் விதைகளைக் கொடுத்து இவற்றை நன்றாக வளர்ப்பவர்களுக்கு நல்ல பரிசு தரப்படும் என்று சொன்னார். ஆச்சரியம், சில மாதங்களிலேயே குப்பைக்கூளங்கள் பசுமையான பலன்தரும் இடங்களாக மாறின. சுத்தமான தெருக்களும், அழகிய செடிகளும் மக்களை மகிழ்வித்தன.

அன்பர்களே, இத்திங்களன்று வெளியான ஒரு செய்தியின்படி,  2016ம் ஆண்டுக்குள் உலகின் ஒரு விழுக்காட்டு பணக்காரர்கள் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பு, மற்ற 99 விழுக்காட்டு மக்கள் கொண்டிருக்கும் செல்வத்தைவிட அதிகரிக்கும் என்று பிரிட்டன் பிறரன்பு அமைப்பான ஆக்ஸஃபாம் கூறியுள்ளது. ஜான் வெஸ்லி போன்று, இந்தப் பணக்காரர்களும் இப்பூமியைப் பாதுகாப்பதற்கு, வளப்படுத்துவதற்கு முயற்சிப்பார்களா? வளமான பூமியை வருங்காலத்துக்குக் கொடுப்பதற்கு, பணக்காரர்களை நாம் சார்ந்து இராமல், நம்மால் இயன்ற சிறு சிறு நல்ல காரியங்களைச் செய்வோம். சிறுதுளி பெருவெள்ளம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.