2015-01-19 16:54:00

பங்களாதேஷ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது,ஆயர்


சன.19,2015. பங்களாதேஷ் நாட்டில் இம்மாதம் 5ம் தேதியிலிருந்து தொடர்ந்து இடம்பெற்றுவரும் கலவரங்களால் குடிமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.

பங்களாதேசின் தற்போதைய நிலவரம் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த, அந்நாட்டு ஆயர் பேரவையின் உதவித் தலைவர் ஆயர் ஜெர்வாஸ் ரொசாரியோ அவர்கள், நாட்டின் அரசியல் சூழல் துன்பகரமான நிலையில் உள்ளது என்று கவலை தெரிவித்தார்.

பங்களாதேஷ், பாகிஸ்தானிலிருந்து விடுதலையடைந்தபோது, பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அடக்குமுறை மற்றும் சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவோம் என்று எண்ணினோம், ஆனால் பங்களாதேஷ் ஆட்சியாளர்கள் எந்தவகையிலும் சிறந்தவர்கள் அல்ல என்றும், பங்களாதேஷ் நாட்டுக்கு சனநாயகம் தேவை என்றும் கூறினார் ஆயர் ரொசாரியோ. 

கடந்த ஆண்டின் தேர்தலை எதிர்த்து, இம்மாதம் 5ம் தேதி பங்களாதேஷ் தேசியக் கட்சி பொதுப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதில் வன்முறையும் வெடித்தது. எனினும், அவாமி கூட்டமைப்பால் நடத்தப்படும் அரசு இப்போராட்டத்தைத் தடை செய்தது. ஆனாலும் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன.

இவ்வன்முறையில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.