2015-01-19 16:18:00

எதையும் கண்மூடித்தனமாக ஏற்கும் கலாச்சாரத்துக்குச் சவால்


சன.19,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பீன்சைவிட்டுப் புறப்பட்ட பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மனிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோணியே தாக்லே அவர்கள், பிலிப்பீன்சிலுள்ள ஒவ்வொருவரும் இத்திருத்தூதுப் பயணம் குறித்து மிகவும் மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறுகின்றனர் எனத் தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்ஸ் மக்களுக்குச் சவால் விடுத்த சமத்துவமின்மை பிரச்சனையைக் களைதல் உட்பட்ட இந்நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு நாட்டினர் அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் தாக்லே.

அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர் ஆகிய அனைவருமே திருத்தந்தையின் செய்தியைத் தெளிவாகப் புரிந்துள்ளனர், இந்தச் செய்தியைச் செயல்படுத்துவதற்கு நாங்கள் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுப்போம் என்று மேலும் கூறினார் கர்தினால் தாக்லே.

புதுமையாகத் தோன்றும் ஒவ்வொன்றையும் கண்மூடித்தனமாக ஏற்கும் கலாச்சாரத்துக்கும் திருத்தந்தை சவால் விடுத்துள்ளார், ஒவ்வொன்றையும் தெளிவாக ஆராய்ந்து விமர்சனப் பார்வையோடு நோக்குமாறு திருத்தந்தை எங்களை அழைத்திருப்பதாக நான் உணருகிறேன் என்றும் பத்திரிகையாளர்களிடம் கூறினார் கர்தினால் தாக்லே.

பிரேசில், மெக்சிகோ ஆகிய இரு நாடுகளுக்கு அடுத்தபடியாக கத்தோலிக்கரை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடு பிலிப்பீன்ஸ். 2010ம் ஆண்டின் நிலவரப்படி, பிலிப்பீன்சில் 75,940,000 பேர் கத்தோலிக்கர். இவ்வெண்ணிக்கை இந்நாட்டின் மக்கள் தொகையில் 80 விழுக்காடாகும். மேலும், இந்தியாவில் 10,570,000, சீனாவில் 9,000,000, இந்தோனேசியாவில் 7,230,000, ஆஸ்திரேலியாவில் 6,500,000 மற்றும் தென் கொரியாவில் 5,270,000 பேர் கத்தோலிக்கர்.

வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.