2015-01-19 17:06:00

உலகளவில் வீணாகும் உணவுப்பொருட்கள்


சன.19,2015. உலகளவில் வீணாகும் உணவுப்பொருட்களின் அளவு, அதிர்ச்சியைத் தருவதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் பசி, பட்டினி இறப்புகள் அதிகரித்து கொண்டிருக்கும்போது, மற்றொருபுறம் உணவுப்பொருட்கள் வீணடிக்கப்படுவதாகக் கூறும் இவ்வறிக்கை, வீணாகும் உணவுப்பொருட்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது.

தொழில்வளம் பெருகிய நாடுகளில் நுகர்வுக் கலாச்சாரம் அதிகரித்து வருவதால், அவர்கள் பயன்படுத்துவதில் 30 விழுக்காடு, அதாவது 28.6 கோடி டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உணவுப்பொருட்களில் அதிகம் வீணடிக்கப்படுவது பழங்கள், காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் எனக்கூறும் இவ்வறிக்கை, விளையும் காய்கறிகள், பழங்களில் ஏறக்குறைய பாதி வீணடிக்கப்படுவதாகவும், அது 3.7 இலட்சம் கோடி ஆப்பிள்களுக்கு சமம் எனவும் தெரிவிக்கிறது.

இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் 22 விழுக்காடு அளவுக்கு எண்ணெய் வித்துகளும், பருப்பு வகைகளும் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பாவில் மட்டும் 2.9 கோடி டன் பால்பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் வீணடிக்கப்படுகின்றன.

ஆதாரம் : பிபிசி








All the contents on this site are copyrighted ©.