2015-01-19 16:10:00

இலங்கை, பிலிப்பின்ஸ் மக்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக


சன.19,2015. “இலங்கையிலும், பிலிப்பின்சிலும் உள்ள என் அன்பு நண்பர்களுக்கு: உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக. தயவு செய்து எனக்காகச் செபியுங்கள்” என்ற வார்த்தைகளை இத்திங்களன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இம்மாதம் 12ம் தேதி இரவு ஏழு மணிக்குத் இலங்கை, பிலிப்பீன்ஸ் ஆகிய இரு ஆசிய நாடுகளுக்கு ஒரு வாரம் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு திரும்பும் வழியில், திருத்தந்தை பயணம் செய்த விமானம் கடந்துவந்த சீனா, மங்கோலியா, இரஷ்யா, பைலோருஷ்யா, போலந்து, செக், சுலோவாக்கியா, ஆஸ்ட்ரியா, சுலோவேனியா, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்குத் தனது நல்வாழ்த்துத் தந்திகளையும் செபங்களையும் அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிலிப்பீன்ஸ் நாட்டுத் தலைவருக்கும் தந்திச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் தனக்குக் கொடுத்த இனிய வரவேற்புக்கும், இப்பயண நாள்களில் காட்டிய ஒவ்வோர் அன்புக்கும் நன்றி, இந்நாடு முழுவதும் அமைதியும் வளமையும் நிரம்பத் தான் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சீன அரசுத் தலைவருக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், அந்நாட்டில் நல்லிணக்கமும் வளமையும் நிரம்பத் தான் செபிப்பதாகக் கூறி, அந்நாட்டினர் எல்லாருக்கும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், புனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25 வருகிற ஞாயிறு மாலை 5.30 மணிக்கு உரோம் புனித பவுல் பசிலிக்காவில் மாலை திருப்புகழ்மாலை செப வழிபாட்டைத் தலைமையேற்று நடத்துவார் திருத்தந்தை பிரான்சிஸ் .

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் (சன.18-25) நிறைவு நாளான ஞாயிறு மாலை நடைபெறும் திருவழிபாட்டில் உரோமையிலுள்ள பிற கிறிஸ்தவ சபைகளின் பிரிதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.

“குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடும்” (cfr. யோவா.4,7) என்பது இவ்வாரத்தின் மையப்பொருளாகும்.

வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.