2015-01-19 17:00:00

1% செல்வந்தரின் சொத்து மற்ற 99% மக்களின் செல்வத்தைவிட அதிகம்


சன.19,2015. உலகின் பெரும் பணக்காரர்களுக்கும், மற்ற மக்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்துவரும்வேளை, 2016ம் ஆண்டுக்குள் உலகின் ஒரு விழுக்காட்டு பணக்காரர்கள் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பு, மற்ற 99 விழுக்காட்டு மக்கள் கொண்டிருக்கும் செல்வத்தைவிட அதிகரிக்கும் என்று ஒரு பிறரன்பு அமைப்பு இத்திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வுலகின் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், பொருளாதார வல்லுனர்கள் ஆகியோர் இம்மாகம் 21 முதல் 24 வரை சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோசில் கூட்டம் நடத்தவிருப்பதை முன்னிட்டு, பிரிட்டனின் அரசு-சாரா பிறரன்பு அமைப்பான ஆக்ஸஃபாம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலம், பொருளாதார நெருக்கடி ஆண்டுகள் எனக் கருதப்பட்டது, ஆயினும் அதே காலக்கட்டத்தில் உலகின் ஒரு விழுக்காட்டு பணக்காரர்கள், தங்களின் செல்வத்தை 44 விழுக்காட்டிலிருந்து, 48 விழுக்காட்டுக்கு உயர்த்தியுள்ளனர், இந்த உயர்வு, 2016ம் ஆண்டில் 50 விழுக்காட்டை எட்டும் எனவும் ஆக்ஸஃபாம் கூறியுள்ளது.

2014ம் ஆண்டில் இந்தப் பன்னாட்டுப் பணக்காரர்களில் வயதுவந்தோர், அதாவது இந்த ஒரு விழுக்காட்டுப் பணக்காரர்கள் சராசரியாக 27 இலட்சம் அமெரிக்க டாலரை வைத்திருந்தனர், 20 விழுக்காட்டுப் பணக்காரர்கள், உலகின் செல்வத்தில் 46 விழுக்காட்டைக் கொண்டிருந்தனர் என ஆக்ஸஃபாம் நடத்திய ஆய்வு கூறுகிறது.

ஆதாரம் : செய்தி நிறுவனங்கள்








All the contents on this site are copyrighted ©.