2015-01-18 13:29:00

மனிலா ரிசால் பூங்காவில் திருத்தந்தையின் திருப்பலி


சன.18,2015. பிலிப்பீன்சில் குழந்தை இயேசு ஞாயிறு இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டது. இந்த இயேசு திருவுருவம் அரசர் போன்று தலையில் கிரீடம், கையில் செங்கோல், பட்டு உடுப்பு அணிந்துள்ளது. மக்கள் பலர் இத்திருவுருவங்களை இந்நாளில் வைத்திருந்ததைக் காண முடிந்தது.  இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை 3.30 மணிக்கு மனிலாவின் ரிசால் பூங்காவில் திருப்பலி நிகழ்த்தச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டிருந்ததால், அவ்விடத்திலிருந்த அறுபது இலட்சம் விசுவாசிகள் மழைப்பாகையை உடுத்தியிருந்தனர். ஆனால் இவர்கள் திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்பதற்கு மழை தடையாகவே இல்லை.

இத்திருப்பலியில் திருத்தந்தை ஆங்கிலத்தில் உரையாற்றினார். ஆசியாவில் விசுவாசத்தின் மறைப்பணியாளர்களாக இருங்கள் என, பிலிப்பீன்ஸ் மக்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இத்திருப்பலியின் இறுதியில் முதலில் பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சாகர்டீஸ் வில்லெகாஸ் அவர்கள், திருத்தந்தையை, கதிரவனின் ஒளி என்று வாழ்த்திப் பேசினார். இப்போது மனிலா வளைகுடாவில் சூரியன் மறையவுள்ளது. உலகின் மிக அழகான சூரிய அஸ்தமனம் இது என்று சொல்வார்கள். சூரியன் மறைந்த பின்னர் இருள் வரும். இதற்குப் பலர் பயப்படுவார்கள். ஆனால் நாங்கள் இதற்குப் பயப்படுவதில்லை. திருத்தந்தையே, தாங்கள் ஒளியைக் கொண்டுவந்துள்ளீர்கள், தாங்கள் கதிரவனின் ஒளி. பிலிப்பீன்ஸ் சிறாரும் எங்களுக்கு கதிரவனின் ஒளியே, சிறார் எங்களின் நம்பிக்கை, எங்களின் மகிழ்வு, எங்களின் சொத்து. திருத்தந்தையே, நாங்கள் உங்களை அன்பு செய்கிறோம், தங்களின் இந்தப் பயணத்துக்கு நன்றி என்று கூறினார்.

இவ்வுரைக்குப் பின்னர் மனிலா கர்தினால் தாக்லே அவர்களும் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். தெருச் சிறார், அநாதைகள், கைம்பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், நோயாளிகள் என ஒவ்வொருவர் பேராலும் நன்றி தெரிவிக்கிறேன். தங்களுக்காகச் செபிக்கும்படி அடிக்கடி கூறுகிறீர்கள். நாங்கள் தங்களுக்காகச் செபிக்கிறோம் என்று உறுதி கூறுகிறோம். ஒவ்வொரு பிலிப்பினோவும் உங்களோடு உரோமைக்கு அல்ல, மாறாக, சேரிகளுக்கும், சிறைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும், அரசியல் உலகுக்கும், கலை, அறிவியல், கல்வி, கலாச்சாரம் என எல்லா இடங்களுக்கும் மறைப்பணியாற்றச் செல்ல விரும்புகின்றனர். கிறிஸ்துவின் ஒளி ஒளிரட்டும், நன்றி எனக் கூறினார் கர்தினால் தாக்லே.   

திருத்தந்தையின் பிலிப்பீன்ஸ் திருத்தூதுப் பயணத்தில் இத்திருப்பலிதான் இறுதி நிகழ்வு. எனவே திருத்தந்தை மழைப்பாகையுடன் திறந்த காரில் அக்கூட்டத்தில் வலம் வந்தபோது மக்கள் எழுப்பிய ஆரவாரம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இத்திருத்தூதுப் பயணம் குறித்து மனிலாவிலிருந்து பேசுகிறார் மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி கஸ்பார்.

இஞ்ஞாயிறு நிகழ்வோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிலிப்பீன்ஸ் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது. இத்திங்களன்று பிலிப்பீன்ஸ் மக்களிடமிருந்து பிரியாவிடைபெற்று உரோமைக்குப் புறப்படுவார்  திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.