2015-01-18 13:14:00

கடுகு சிறுத்தாலும்... எதைச் செய்தாலும் பயனிருக்க வேண்டும்


ஒரு விவசாயி கிணறு வெட்ட ஆசைப்பட்டார். அதனால் வீட்டுக்குப் பின்னால் கொஞ்சம் காலியாக இருந்த இடத்தில் கிணறு வெட்டத் தொடங்கினார். பத்து அடிகள் தோண்டினார். தண்ணீர் வரவில்லையே என்று தவித்தார். உடனே அதற்குச் சற்று தள்ளி இன்னொரு குழி தோண்டினார். இச்சமயம் பத்து அடிகள் தோண்டினார். தண்ணீர் வரவில்லை. கவலை அதிகமாகியது. இப்படியே அந்த இடத்தில் கொஞ்சம் தள்ளித் தள்ளி குழிகள் தோண்டினார். ஆனால் எந்தக் குழியிலும் தண்ணீர் வரவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலர் அவரிடம் மெதுவாக வந்து பேச்சுக்கொடுத்தார்கள். அவர் கிணறு வெட்ட ஆசைப்பட்டதைச் சொன்னார். அவர் மேல் பரிதாபப்பட்ட அவர்கள் அந்த விவசாயிடம், ஏம்ப்பா, இப்படி மாறி மாறிக் குழி தோண்டினால் எப்படி தண்ணீர் கிடைக்கும், அதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் குழி தோண்டியிருந்தால் இந்நேரம் தண்ணீர் கிடைத்திருக்கும். இப்படி உன் உழைப்பை வீணாக்கிவிட்டாயே என்று சொன்னார்கள். அப்போதுதான் அந்த விவசாயிக்குத் தனது தவறு புரிந்தது.  

எதைச் செய்கிறோம், எப்படிச் செய்கிறோம் என்று சிந்திக்காமல் செயல்பட்டால் பலன் கிட்டாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.