2015-01-16 16:37:00

மனிலா அமலமரி பேராலயத்தில் திருத்தந்தை


சன.16,2015. பிலிப்பீன்ஸ் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நிகழ்வாக, பிலிப்பீன்ஸ் Malacanan அரசுத்தலைவர் மாளிகையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மனிலா அமலமரி பேராலயம் சென்றார் திருத்தந்தை. அப்போது உள்ளூர் நேரம் காலை 11.15 மணி. திருத்தந்தையின் கார் சென்றவிடமெல்லாம் மக்கள் வெள்ளம். அவரது தரிசனம் கிடைத்துவிட்டாலே போதும் என்ற உணர்வில் மக்கள் ஓடி ஓடிச் சென்றனர். வத்திக்கானிலுள்ள பாப்பிறையின் மெய்க்காப்பாளர்களாகிய சுவிஸ் கார்ட்ஸ் போன்று உடையணிந்து இரண்டு வரிசைகளில் சிறார் அப்பேராலயப் படிகளில் நின்று திருத்தந்தையை வரவேற்றனர். குருக்கள், துறவிகள், குருத்துவ மாணவர்கள் என ஏறக்குறைய 2000 பேர் பேராலயத்தில் இருந்தனர். அதற்கு வெளிப்புறத்திலும் மக்கள் வெள்ளம் அலைமோதியது. ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவராகிய மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், மனிலா கர்தினால் தாக்லே ஆகிய இருவரும் திருத்தந்தையோடு சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினர். மேலும் ஏறக்குறைய 600 அருள்பணியாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இத்திருப்பலி மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை, நீங்கள் என்மீது அன்பு செலுத்துகிறீர்களா?.. என்று கேட்டவுடன், அங்கு கூட்டத்திலிருந்து ஒரே குரலாக ஆங்கிலத்தில் எஸ், ஆமாம் என்று பதில் வந்தது. உடனே திருத்தந்தை நன்றி என சிரித்துக்கொண்டே சொல்லி, இதை என்னிடம் கூறாதீர்கள், இயேசுவிடம் கூறுங்கள் என்று பதில் சொன்னார். ஏனெனில் இக்கேள்வி, இயேசு பேதுருவிடம் மூன்றுமுறை கேட்டதாகும். இந்நற்செய்திப் பகுதியே இத்திருப்பலியில் வாசிக்கப்பட்டது. பின்னர் தனது மறையுரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்திருப்பலியின் இறுதியில் மனிலா பேராயர் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.  இத்திருப்பலியை முடித்த பின்னர் அப்பேராலயத்துக்கு அருகிலுள்ள தெருச்சிறார் இல்லத்துக்குச் சென்றார். ஓர் இயேசு சபை அருள்பணியாளரால் இவ்வில்லம் 1998ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது ப்ரெஞ்ச் அருள்பணியாளர் மத்யூ என்பவரால் நடத்தப்படும் இவ்வில்லத்தில் 20 தெருச்சிறார் வாழ்கின்றனர். இன்று மற்ற இடங்களிலிருந்தும் 320 தெருச்சிறார் அங்கு இருந்தனர். சிறார் திருத்தந்தையை வரவேற்றுப் பாடினர். பழைய தாள்களைக்கொண்டு ஒரு சிறுவன் செய்திருந்த கலைவண்ணம் ஒன்று திருத்தந்தைக்கு அளிக்கப்பட்டது. திருத்தந்தையும் சிறாரை அணைத்து முத்தமிட்டு சிறு பரிசுகளை அளித்தார். ஒருசிலரை தனது மடியில் தூக்கி வைத்து முத்தமிட்டார். குடும்பங்கள் இல்லாத இச்சிறாரைப் பார்க்கும்போது மனம் நெகிழ்ந்தேன் என்றார் திருத்தந்தை.

இத்துடன் இவ்வெள்ளி காலை நிகழ்வுகள் நிறைவு பெற்றன. மனிலாவில் திருத்தந்தையை மக்கள் எவ்வாறு வரவேற்றனர் என்று மனிலாவிலிருந்து பேசுகிறார் மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி கென்சி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.