2015-01-16 16:43:00

திருத்தந்தையின் பிலிப்பீன்ஸ் பயணம் – மனிலாவில் திருத்தந்தை


சன.16,2015. அன்பு நெஞ்சங்களே, இவ்வியாழன் காலையில் இலங்கை மக்களிடம் பிரியாவிடை சொல்லி மனிலாவுக்குப் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று மாலை ஆறு மணியளவில் மனிலா வந்து சேர்ந்தார். அன்று இரவு ஏழு மணியளவில் மனிலா திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று பிலிப்பீன்ஸ் நாட்டில் முதல் நாள் பயண நிகழ்வுகளை ஆரம்பித்தார். “திருஅவையின் இளமைத்தன்மைக்கும் உயிரூட்டத்துக்கும் பிலிப்பீன்ஸ் சான்று பகர்வதாக” என்ற டுவிட்டர் செய்தியை இவ்வெள்ளி காலையில் பதிவு செய்து பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை. இந்நாளில் பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் மாளிகையில் அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்தித்தல், மனிலா அமலமரி பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றல், மாலையில் குடும்பங்களைச் சந்தித்தல் ஆகிய மூன்று முத்தான நிகழ்வுகள் நடைபெற்றன. மனிலா திருப்பீடத் தூதரகத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள Malacanan அரசுத்தலைவர் மாளிகைக்கு இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு, அதாவது இந்திய நேரம் காலை 6.45 மணிக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இம்மாளிகை, 1802ம் ஆண்டில் இஸ்பானிய காலனி ஆதிக்கத்தின்போது இஸ்பானிய கலைவண்ணத்தில் கட்டப்பட்டது. அம்மாளிகையில் பாரம்பரிய இசை உட்பட, ஒரு நாட்டுத் தலைவருக்குரிய அதிகாரப்பூர்வ வரவேற்புகள் திருத்தந்தைக்கு அளிக்கப்பட்டன. அங்கு திருத்தந்தை நுழைந்தவுடன் வரவேற்பின் அடையாளமாக, அவருக்கு ஒரு கைக்குட்டை கொடுக்கப்பட்டது. அம்மாளிகையில் தங்கப் புத்தகத்திலும் திருத்தந்தை கையெழுத்திட்டார். பரிசுகள் பரிமாறப்பட்டன. பின்னர், அந்த Malacanan அரசுத்தலைவர் மாளிகையில், அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் என ஏறக்குறைய 350 பேர் அவரை வரவேற்றனர். அங்கு முதலில் அரசுத்தலைவர் பெனிஞ்ஞோ அக்குய்னோ அவர்கள் உரையாற்றினார்.

பின்னர் திருத்தந்தை ஆங்கிலத்தில் தனது உரையை ஆரம்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.