2015-01-16 16:25:00

திருத்தந்தை - மனிலாவில் குடும்பங்கள் சந்திப்பு


சன.16,2015. இவ்வெள்ளியன்று, மற்றொரு டிவிட்டர் செய்தியையும் திருத்தந்தை வெளியிட்டுள்ளார். “எந்த ஒரு நாட்டின் மிகப் பெரிய சொத்தாக குடும்பம் உள்ளது. சமுதாயத்தின் மூலைக்கல்லாகிய அதனைப் பாதுகாத்து உறுதிப்படுத்த நாம் அனைவரும் உழைப்போம்” என்று அதில் பதிவு செய்துள்ளார். இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, மனிலா திருப்பீடத் தூதரகத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மனிலாவின் “Mall of Asia Arena” விளையாட்டுத் திடல் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு திருத்தந்தை சென்றவுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அம்மாலையுடனே திறந்த காரில் அவ்விடத்தை வலம் வந்து குழந்தைகளை முத்தமிட்டு முதியோரையும் நோயாளிகளையும் தனியே ஆசீர்வதித்தார் திருத்தந்தை. இவ்வரவேற்பில் ஒரு குடும்பம் ஏழ்மை பற்றியும், மற்றொரு குடும்பம் புலம்பெயர்ந்த குடியேற்றம் பற்றியும் விளக்கியது. குரூஸ் குடும்பத்தின் தலைவர் சாட்சி கூறியபோது, தனக்கும் தனது மனைவிக்கும் காது கேட்காது. ஆனால் பிள்ளைகள் பேசுகின்றனர். நான் காது கேளாத சிறார்க்கு மறைக்கல்வி போதிக்கிறேன். கத்தோலிக்க காதுகேளாதோர் அமைப்பில் நானும் உறுப்பினர், என்னைப் போன்றுள்ள பெற்றோர் ஆலயத்தில் தியானங்கள் கொடுக்குமாறு இந்நாளில் ஊக்குவிக்கிறேன் என்று கூறினார்.

மேலும், இவ்வரவேற்பில் ஒரு குடும்பத்தினர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர்.  1995ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 2வது தடவையாக பிலிப்பீன்ஸ்க்கு உலக இளையோர் தினத்துக்கு வந்தபோது ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவின் பணியில் தனிப்பட்ட முறையில் பங்கு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்த வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே தங்களிலும் தொடர்ந்து ஒலிக்கின்றன. தங்களின் இந்த வியத்தகு திருத்தூதப் பயணம் அனைத்து பிலிப்பினோ குடும்பங்களையும் புதிய நற்செய்திப் பணிக்கு இட்டுச் செல்லட்டும் என்று கூறினர். இச்சந்திப்பில் திருத்தந்தை குடும்பங்களுக்கு உரையாற்றினார்.

இத்துடன் இவ்வெள்ளி தின நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. திருத்தந்தை விரும்புவதுபோல் நல்ல உறுதியான குடும்பங்கள் பிலிப்பீன்சில் அமைந்து உலகுக்குச் சான்று பகரட்டும். 

 ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.