2015-01-16 16:18:00

அரசு அதிகாரிகளே, ஏழைகளின் குரலுக்குச் செவிகொடுங்கள்


சன.16,2015. பிலிப்பீன்ஸ் நாட்டில் இவ்வெள்ளி காலை முதல் நிகழ்ச்சியாக அந்நாட்டின் அரசுத்தலைவர் மாளிகையில் அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பிலிப்பீன்ஸ் நாட்டுக்குத் தன்னை அழைத்ததற்கு இதயங்கனிந்த நன்றி சொல்லி தனது இப்பயண நோக்கத்தை எடுத்துச் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். எனது திருத்தூதுப் பயணம் மேய்ப்புப்பணி நோக்கம் கொண்டது. பிலிப்பீன்ஸ் கடற்கரைகளில் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் ஐந்தாம் நூற்றாண்டைக் கொண்டாடுவதற்குத் தலத்திருஅவை தயாரித்துவரும் இவ்வேளையில் இப்பயணம் இடம்பெறுகின்றது. கிறிஸ்தவச் செய்தி பிலிப்பீன்ஸ் கலாச்சாரத்தில் மிக ஆழமான தாக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த முக்கியமான ஆண்டுநிறைவு தொடர்ந்து தனது கனிகளைக் கொடுக்கும் எனவும், இதன் வல்லமை, சமுதாயத்தில் நன்மைத்தனம், மாண்பு மற்றும் பிலிப்பீன்ஸ் மக்களின் ஏக்கங்களைத் தூண்டுவதற்கு உகந்ததாய் அமையும் எனவும் நம்புகிறேன். இன்னும், குறிப்பாக, ஹையான் புயலால் துன்பங்களை அனுபவிக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கு மிக நெருக்கமாக நான் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதாகவும் இத்திருத்தூதுப்பயணம் அமைந்துள்ளது. இந்த இயற்கைப் பேரிடருக்கு மத்தியில் பிலிப்பீன்ஸ் மக்கள் காட்டிய வீரத்துவமான உறுதியையும் விசுவாசத்தையும் நான் வியக்கிறேன். இப்பண்புகள் கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து பெறப்பட்டவை. நாடு எதிர்நோக்கிய அந்த நெருக்கடியில் பலர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்கள். மீள்கட்டமைப்புப் பணியில் காட்டப்படும் தோழமையுணர்வின் எடுத்துக்காட்டு நமக்கு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கின்றது. ஆசியாவில் பிற நாடுகளைப் போலவே பிலிப்பீன்ஸ் நாடும், உண்மையான மனித விழுமியங்களை மதித்தல், கடவுள் கொடுத்துள்ள மனித மாண்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல், புதிய மற்றும் சிக்கலான அரசியல் மற்றும் நன்னெறிக் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இருத்தல் ஆகிய இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நவீன சமுதாயத்தை உறுதியாய்க் கட்டுவதற்குச் சவால்களை எதிர்கொள்கின்றது. அரசியல் தலைவர்கள் நேர்மைக்கும் ஒருங்கிணைந்த ஆளுமைக்கும், பொதுநலனுக்கும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று முந்தையக் காலங்களைவிட இக்காலத்தில் உங்கள் நாட்டில் பல குரல்கள் எழும்பியுள்ளன. இந்த வகையில் அவர்கள், கடவுள் இந்த நாட்டை ஆசீர்வதித்துள்ள வளமையான மனித மற்றும் இயற்கை வளங்கள் காக்கப்படுவதற்கு உதவ முடியும். இவ்வாறு இக்காலத்துக்குத் தேவைப்படும் நன்னெறி வளங்களை நிறைத்து, அவற்றை வருங்காலத் தலைமுறைகளுக்கு வழங்க முடியும். உண்மையான நீதி, தோழமை மற்றும் அமைதி நிறைந்த சமுதாயத்தையும் கொடுக்க முடியும். இந்த தேசிய இலக்குகளை அடைவதற்கு சமூகநீதியை உறுதிசெய்து மனித மாண்பை மதித்தல் அவசியமாகும். மாபெரும் விவிலிய மரபைக் கொண்டுள்ள இம்மக்களுக்கு ஏழைகளின் குரல்களைக் கேட்க வேண்டிய கடமை உள்ளது. அரசு அதிகாரிகள், ஏழைகளின் குரலுக்குச் செவிகொடுக்க வேண்டும், ஊழலின் அனைத்து வடிவங்களையும் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு செய்வது, இடறல்களையும், சமூக சமத்துவமின்மைகளையும் உண்டாக்கும் அநீதிகள் மற்றும் அடக்குமுறைப் பிணைப்பை உடைத்தெறியும். மேலும், ஏழ்மையை நிரந்தரமாக்கி, ஏழைகளை ஒதுக்கும் சமூக அமைப்புமுறைகளைச் சீர்திருத்துவதற்கு இதய மனமாற்றம் தேவை. பிலிப்பீன்ஸ் ஆயர்கள் இவ்வாண்டை ஏழைகளின் ஆண்டாக அறிவித்துள்ளனர். இந்த இறைவாக்கு அறிவிப்பு, ஒவ்வொருவருக்கும், சமூகத்தின் எல்லா நிலைகளுக்கும் சவால் விடுக்கின்றது. ஏழைகளிடமிருந்து வளங்களைப் பறிக்கும் ஊழலின் ஒவ்வொரு வடிவத்தையும் புறக்கணிக்க இந்த ஏழைகள் ஆண்டு அழைக்கின்றது. சமுதாயத்தைப் புதுப்பிப்பதில் அடிப்படையான பங்கு குடும்பங்களால், குறிப்பாக இளையோரால் நடத்தப்படுகின்றது. இந்த எனது பயணத்தின் முத்தாய்ப்பாக மனிலாவில் குடும்பங்களையும், இளையோரையும் சந்திப்பது அமையும். குடும்பங்களுக்குச் சமுதாயத்தில் தவிர்க்க இயலாத பணி உள்ளது. குடும்பங்களில் குழந்தைகள் உயர்ந்த விழுமியங்களைக் கற்றுக்கொள்கின்றனர். ஆனால், கடவுளின் அனைத்துக் கொடைகள் போலவே குடும்பமும் முகமிழந்து அழிக்கப்பட முடியும். எனவே குடும்பத்திற்கு ஆதரவு தேவை. இன்றைய நம் சனநாயகங்களில், ஒவ்வொரு மனிதரின் தவிர்க்க இயலாத மாண்பையும், மனச்சான்றின் உரிமைகளையும் மதித்தல், சமய சுதந்திரம் மற்றும் கருவில் வளரும் குழந்தை முதல் வயதானவர்கள் நோயாளிகள்வரை அவர்கள் வாழ்வதற்கான இன்றியமையாத உரிமைகளை மதித்தல் போன்ற அடிப்படை மனித விழுமியங்களை பாதுகாத்துப் பேணிவது எவ்வளவு கடினமாக உள்ளது என்பதை நாம் அறிந்துள்ளோம். இதற்காகவே குடும்பங்களும் தலக்குழுக்களும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். நன்மைத்தனம், பிரமாணிக்கம், தோழமை போன்றவற்றை மதிக்கும் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தை வழங்கும் கண்ணோட்டத்தையும், மதிப்பீடுகளையும்  நம் இளையோருக்கு வழங்க வேண்டும்.

அரசுத்தலைவரே, ஆசிய நாடுகள் மத்தியில் புரிந்துகொள்ளுதலையும், ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை நான் இப்பயணத்தில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதேநேரம், இந்நாட்டைவிட்டு வெளிநாடுகளில் வாழும் பிலிப்பீன்ஸ் நாட்டவர் அவர்கள் வாழும் நாடுகளுக்கு வாழ்வையும் நலத்தையும் அளித்து வருகின்றனர். பிலிப்பினோ மக்களின் வளமையான கலாச்சார மற்றும் ஆன்மீக மரபுகள், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தோடு நாட்டைக் கட்டியெழுப்பும் உங்கள் முயற்சிகளுக்கு உதவுவதாக. பல்வேறு மதத்தவர் மத்தியில் உரையாலும் ஒத்துழைப்பும் நிலவுவதாக. இந்நாட்டின் தெற்கில் அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் காணப்படும் முன்னேற்றம், நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கு ஒத்திணங்கும் வகையில் தீர்வுகள் காணப்படும் என நம்புகிறேன். இந்த அன்பு நாட்டின்மீது இறையாசீர் நிரம்புவதாக என்று சொல்லி இந்நாட்டுக்கான தனது முதல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.