2015-01-15 15:13:00

பிலிப்பீன்ஸ் ஒரு பார்வை


சன.15,2015. தென்கிழக்கு ஆசியாவில், மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குடியரசு  நாடாகிய பிலிப்பீன்ஸ் ஒரு தீவு நாடாகும். 7,107 தீவுகளைக் கொண்டுள்ள இந்நாடு Luzon, Visayas, Mindanao ஆகிய முக்கிய புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் தலைநகர் மனிலாவாக இருந்தாலும், Quezon நகரமே மக்கள்தொகையை அதிகமாகக் கொண்டிருக்கிறது. பிலிப்பீன்ஸ்க்கு வடக்கே தாய்வானும்; மேற்கே தென் சீனக் கடலுக்கு அப்பாலுள்ள வியட்னாமும்; தென்மேற்கே சுலு கடலுக்கு அப்பாலுள்ள புரூணை தீவுகளும்; தெற்கே இந்தோனேசியாவின் ஏனையத் தீவுகளிலிருந்து பிலிப்பைன்சைப் பிரிக்கும் செலேபெஸ் கடலும்; கிழக்கில் பிலிப்பீன்ஸ் கடலும், பலாவு தீவும் எல்லைகளாக உள்ளன. இந்நாடு, பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதாலும் நில நடுக்கோட்டுக்கு அண்மையில் உள்ளதாலும் நிலநடுக்கங்களும், புயல்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இங்கு அதிகமாக உள்ளன. அதோடு ஏராளமான இயற்கை வளங்களையும், உலகின் மிகப்பெரிய பல்லுயிரின வகைகளையும் கொண்டுள்ள இந்நாடு, பரப்பளவில் உலகில் 64 வது பெரிய நாடாகும். இதன் பரப்பளவு ஏறக்குறைய 3 இலட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (115,831 sq mi) ஆகும். மக்கள் தொகையில் ஆசியாவில் ஏழாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாகவும், உலகில் 12வது நாடாகவும் விளங்குகின்றது. ஆசியாவில் கத்தோலிக்கரை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடு பிலிப்பீன்ஸ். இந்நாட்டின் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இதனால் உலகில், சொந்த நாடுகளைவிட்டு மிகப்பெரிய எண்ணிக்கையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களாகவும் இந்நாட்டினர் உள்ளனர். இந்நாட்டின் தீவுகளில் பல்வேறுபட்ட இனங்களும் கலாச்சாரங்களும் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில், சீனா, மலேசியா, இந்தியா மற்றும் இசுலாமிய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன. பின்னர், டட்டுக்கள், ராஜாக்கள், சுல்தான்கள் அல்லது லக்கான்களின்கீழ் பல்வேறு அரசுகள் இங்கு நிறுவப்பட்டன.

1521ம் ஆண்டில் Ferdinand Magellanனின் வருகை இஸ்பானியக் காலனி ஆதிக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. 1543ம் ஆண்டில் இஸ்பானிய நாடுகாண் பயணி Ruy López de Villalobos, அப்போதைய இஸ்பானிய மன்னர் இரண்டாம் பிலிப் அவர்களைக் கவரவிக்கும் பொருட்டு இத்தீவுக்கூட்டத்திற்கு லாஸ் ஐஸ்லாஸ் பிலிப்பினாஸ் (Las Islas Filipinas) எனப் பெயரிட்டார். மெக்சிக்கோ நகரத்திலிருந்து மிகுவெல் லோபேஸ் டி லெகாஸ்பியின் வருகையுடன் 1565ம் ஆண்டில் இத்தீவுக்கூட்டத்தில் முதலாவது இஸ்பானியக் குடியிருப்பு நிறுவப்பட்டது. பிலிப்பீன்ஸ் 300 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்பானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இதன் விளைவாகவே கத்தோலிக்கம் இந்நாட்டின் முக்கிய மதமானது. இந்தக் காலத்தில், பசிபிக்கின் இரு கரைகளுக்கு இடையே மனிலா–அகபல்கோ போர்க்கப்பல் மூலமான வர்த்தகத்தால் ஆசியாவை அமெரிக்கக் கண்டத்துடன் இணைத்த மேற்கத்தியப் பாலமாக, மனிலா விளங்கியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிலிப்பீன்ஸ் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதிலிருந்து சர்வாதிகாரத்தைத் தோற்கடித்த மக்கள் அதிகாரப் புரட்சி உள்ளடங்கலானப் பல கொடிய குடியரசு தொடர்பான அனுபவங்களை பிலிப்பீன்ஸ் எதிர்கொண்டது. இந்நாட்டின் மக்கள்தொகை அளவும், பொருளாதாரநிலைச் சக்தியும் வளரும் நாடுகளில் சக்திமிக்க நாடாக வகைப்படுத்தப்படக் காரணமாக அமைந்துள்ளன. இது ஐக்கிய நாடுகள் அவை, உலக வணிக அமைப்பு, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, கிழக்காசிய உச்சி மாநாடு ஆகியவற்றை நிறுவிய உறுப்பு நாடுகளுள் ஒன்றாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/கூகுள்








All the contents on this site are copyrighted ©.