2015-01-15 15:18:00

திருத்தந்தையின் இலங்கைத் திருத்தூதுப் பயண நிறைவு


சன.15,2015. அன்பு நேயர்களே, இத்திங்கள் இரவு உரோம் நேரம் ஏழு மணிக்கு உரோம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குத் தனது முதல் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் 48 மணி நேரங்கள் பயண நிகழ்வுகளை நடத்தி அந்நாட்டினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இறைவன் நம்மை வியக்க வைப்பவர் என்று தனது மறையுரைகளில் அடிக்கடி சொல்லிவரும் திருத்தந்தை, தனது செயல்கள் மூலம் மக்களை அவ்வப்போது வியப்பில் ஆழ்த்தி  வருகிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது. சனவரி 14, இப்புதன் மாலை 3.30 மணிக்கு இலங்கை மடு அன்னைமரியா திருத்தலத்தில் நடந்த வழிபாட்டில் கலந்துகொண்டார் திருத்தந்தை. அச்சமயத்தில் அவருக்கு, சிறிய மடு அன்னைமரியா திருவுருவம் பரிசாக அளிக்கப்பட்டது. அதை அவர் அன்போடு வாங்கி அணைத்துக்கொண்டு நின்று செபித்தது, அன்னைமரியா மீது திருத்தந்தை கொண்டிருந்த பக்தியை வெளிப்படுத்தியது. அதோடு மற்றவர்களிலும் அன்னைமரியா பக்தியை அது ஆழப்படுத்தியது. மடுப் பகுதியிலிருந்து ஹெலிகாப்டரில் கொழும்பு திருப்பீடத் தூதரகத்துக்கு மாலை 6 மணிக்குமேல் வந்தார் திருத்தந்தை. அதற்குப் பின்னர் பயண நிகழ்வுகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அன்று அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளை அருள்பணி எல் எக்ஸ் ஜெரோம் அவர்கள் குரலில் கேட்போம். திருத்தந்தையின் பயண விபரங்கள் குறித்து நமக்கு நேரிடையாக வழங்குவதற்காக வத்திக்கான் வானொலியிலிருந்து கொழும்பு சென்றுள்ளார் அருள்பணி எல் எக்ஸ் ஜெரோம்…

கொழும்பு நகரில் திருத்தந்தை சென்ற எல்லா இடங்களிலும் மக்கள் வெள்ளம். மதம், இனம் பாராது அனைவரும் திருத்தந்தையைக் கண்டு ஆசீர்பெற்றனர். திருத்தந்தையும் தனது அன்பையும், ஆசீரையும் அம்மக்களுக்கு அளித்து இவ்வியாழன் காலை ஏர் லங்கா விமானத்தில் இலங்கையிலிருந்து மனிலா புறப்பட்டார். இலங்கையில், அனைத்து தினத்தாள்களும் திருத்தந்தையின் புகைப்படங்களால் நிறைந்திருந்தன.  அதோடு, திருத்தந்தை இலங்கைக்கு ஒரு புனிதரைக் கொடையாகத் தந்துள்ளார், திருத்தந்தை இலங்கையின் ஒற்றுமைக்காகச் செபித்தார்... இப்படி ஊடகங்கள் பாராட்டி எழுதியிருந்தன. திருத்தந்தையின் இந்த இலங்கைத் திருத்தூதுப் பயணத்தை அருள்பணி எல் எக்ஸ் ஜெரோம் அவர்கள் கொழும்பு நகரிலிருந்து தொகுத்து வழங்குவதைக் கேட்போம்….

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.