2015-01-14 16:39:00

மடுத்திருத்தலத்தில் மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு வரவேற்புரை


சன.14,2015. மடுத்திருத்தலத்துக்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வரவேற்புரை வழங்கினார் மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு.

பெருமதிப்புக்குரிய திருத்தந்தையே, இன்று இங்கு கூடியுள்ள ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் சார்பாக பிள்ளைகளுக்குரிய வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். உண்மை, நீதி, ஒப்புரவு ஆகிய இவற்றில் அடிப்படையைக் கொண்ட அமைதியின் தூதுவராக தாங்கள் எங்களின் இலங்கை நாட்டுக்கு வந்துள்ளீர்கள். நம் ஆண்டவர் மற்றும் புனித அசிசி பிரான்சிசின் அடிச்சுவடுகளில் ஏழைகள் மற்றும் துன்புறுவோர்மீது தாங்கள் கொண்டுள்ள வியத்தகு அன்புக்கு நன்றி. ஆசியாவில் முதல் கிறிஸ்தவ மறைசாட்சிகளைக் கொண்டிருக்கும் இடமாக மன்னார் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வட பகுதியிலிருந்த யாழ்ப்பாண மன்னரால் 1544ம் ஆண்டில் 600 மன்னார் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மன்னார் மறைசாட்சிக் கிறிஸ்தவர்களின் இரத்தம் வடக்கு மற்றும் இலங்கை முழுவதன் விசுவாசத்தின் வித்தாக மாறியுள்ளது. கடுமையான காட்டுப் பகுதியில் 400 ஆண்டுகளாக இருக்கும் மடு திருத்தலமும் வளமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. செபமாலை அன்னை திருத்தலமாகிய இங்கு மக்கள் விசுவாசத்தில் ஆழப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்னையின் விண்ணேற்பு விழாவன்று 6 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வருகின்றனர். திருத்தந்தையே தங்களின் இப்பயணமும், செபங்களும் எம் தாய் நாட்டுக்கு அமைதியையும் வளமையையும் கொண்டு வருவதாக. இந்நேரத்தில் நாங்கள் எங்களின் பிள்ளைகளுக்குரிய அன்பையும் பணிவையும் மதிப்பையும் தங்களுக்குத் தெரிவிக்கிறோம். திருஅவையையும் பரந்த உலகையும் தூண்டி வழிநடத்தும் தங்களின் மேய்ப்புப்பணிகளில் கடவுள் தங்களை ஆசீர்வதிப்பாரக. அன்னை மரியா தங்களை அவருக்கு நெருக்கமாக வைத்திருப்பாராக.

இவ்வாறு வரவேற்புரையாற்றினார் ஆயர் ஜோசப் இராயப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.