சன.13,2015. இலங்கைக்குத் தனது முதல் திருத்தூதுப் பயணத்தை இத்திங்கள் இரவு உரோமையிலிருந்து தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொழும்பு பண்டார நாயக்க பன்னாட்டு விமான நிலைய வரவேற்பில் ஆற்றிய உரையில் தனது இலங்கைத் திருத்தூதுப் பயணம் மேய்ப்புப்பணியை மையமாகக் கொண்டது என்று கூறினார். உங்களின் இனிய வரவேற்புக்கு நன்றி. இலங்கைக்கு மேற்கொண்டுள்ள இப்பயணத்தையும், உங்களோடு தங்கும் இந்நாள்களையும் எதிர்நோக்கி இருந்தேன். இலங்கை அதன் இயற்கை அழகினால், இந்தியப் பெருங்கடலின் முத்து என அறியப்படுகின்றது. இன்னும், மிக முக்கியமாக, இத்தீவு, தனது மக்களின் இதமான பண்புக்கும், அதன் வளமையான பன்மைத்தன்மை கொண்ட கலாச்சார மற்றும் மத மரபுகளுக்கும் பெயர்பெற்றது என்று விமானநிலைய வரவேற்பில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் புதிய பொறுப்புக்களை ஏற்றுள்ள அரசுத்தலைவருக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர், அந்நாட்டின் அரசு அதிகாரிகளுக்கும், அந்நாட்டின் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் முக்கிய சமயத் தலைவர்களுக்கும், விசுவாசிகளுக்கும், பாடகர் குழுவுக்கும், இந்தப் பயணத்தை இயலக்கூடியதாய் ஆக்கிய எல்லாருக்கும் தனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
எனது இலங்கைப் பயணம் முதலில் மேய்ப்புப்பணியை மையமாகக் கொண்டது. கத்தோலிக்கத் திருஅவையின் உலகளாவிய மேய்ப்பர் என்ற வகையில், இத்தீவின் கத்தோலிக்கரைச் சந்தித்து, அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களோடு சேர்ந்து செபிப்பதற்காக வந்துள்ளேன். இப்பயணத்தின் முத்தாய்ப்பாக, முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் அவர்களின் புனிதப்பட்டமளிப்பு நிகழ்வு உள்ளது. இவரது எடுத்துக்காட்டான கிறிஸ்தவப் பிறரன்பும், இனம் அல்லது மதம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் இவர் மதித்ததும் தொடர்ந்து நமக்குத் தூண்டுதலாகவும், போதனையாகவும் உள்ளது. ஆயினும், எனது இந்தப் பயணம், எல்லா இலங்கை மக்கள்மீதும் திருஅவை கொண்டிருக்கும் அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்துவதற்கும், கத்தோலிக்கச் சமுதாயம், இந்நாட்டினரின் வாழ்வில் உயிரூட்டத்துடன் செயல்படுவதற்கு ஆவல் கொண்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கும் இடம்பெறுகிறது.
இந்த நம் உலகில், பல சமூகங்கள் தொடர்ந்து தங்களுடனே போரிட்டுக்கொள்வது துன்ப நிகழ்வாகவே இருக்கிறது. பழையதோ, புதியதோ வேறுபாடுகள் மற்றும் இணக்கமின்மைகளுடன் ஒப்புரவு கொள்வதற்குத் திறனற்று இருப்பது, இன மற்றும் சமயப் பதட்டநிலைகளை உருவாக்குகின்றது, இது அடிக்கடி வன்முறையாகவும் வெடிக்கின்றது. இலங்கை பல ஆண்டுகளாக உள்நாட்டு மோதல்களின் கொடுமையை அறிந்துள்ளது. இப்போது, அந்த ஆண்டுகளின் வடுக்களைக் குணப்படுத்துவதற்கும், உறுதியான அமைதிக்கும் வழிகளைத் தேடுகின்றது. அநீதிகள், வெறுப்புணர்வுகள், போரினால் ஏற்பட்ட நம்பிக்கையின்மை ஆகிய கசப்புகளை மேற்கொள்வது அவ்வளவு எளிதான வேலை இல்லை. நன்மையினால் தீமையை மேற்கொள்வதாலும், ஒப்புரவு, ஒருமைப்பாடு, அமைதி ஆகிய நற்பண்புகளை வளர்ப்பதாலும் இதனை அடையலாம். குணப்படுத்தும் நடவடிக்கைகளில் பழைய காயங்களைத் திறக்காமல், உண்மையில் ஆர்வம் கொள்ளவேண்டியது அவசியம். நீதி, குணப்படுத்தல், ஒன்றிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் கருவிகளாகவும் இதனைச் செய்ய வேண்டும்.
அன்பு நண்பர்களே, ஒப்புரவை ஏற்படுத்தும் வழிமுறையிலும், நாட்டில் இடம்பெற்றுவரும் மீள்கட்டமைப்பிலும் பல்வேறு மத மரபுகளைப் பின்செல்பவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இந்த வழிமுறை வெற்றிபெறுவதற்கு சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும், இதில் எல்லாருக்கும் பங்கு இருக்க வேண்டும். தங்களின் ஆவல்களையும், தேவைகளையும், ஏக்கங்களையும், அச்சங்களையும் வெளிப்படுத்துவதற்கு அனைவருக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, ஒருவர் ஒருவரை ஏற்பதற்கும், நியாயமான பன்மைத்தன்மைகளை மதிப்பதற்கும், ஒரே குடும்பமாக வாழக் கற்பதற்கும் அவர்கள் தயாரிக்கப்பட வேண்டும். பன்மைத்தன்மை, ஒருபோதும் அச்சுறுத்தலாக நோக்கப்படக் கூடாது. ஆனால், வளப்படுத்தும் ஓர் ஊற்றாக நோக்கப்பட வேண்டும். இவ்வாறு நோக்கப்படும்போது, நீதி, ஒப்புரவு, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் பாதை தெளிவானதாக மாறும்.
இந்த ஓர் உணர்வில் இடம்பெறும் பெரிய மீள்கட்டமைப்புப் பணி, உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றவும், இன்னும் மிக முக்கியமாக, மனித மாண்பை ஊக்குவித்து மனித உரிமைகளை மதித்து சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் முழுமையாய் இணைக்கப்படுவதாய் அமைய வேண்டும். இலங்கையின் அரசியல், சமய மற்றும் கலாச்சாரத் தலைவர்கள், தங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் நன்மையான செயல்களால் நிறைத்துச் செயல்படும்போது, அது கொணரும் குணப்படுத்தல் இந்நாட்டு மக்களின் பொருளாதார மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு நிலையான வாய்ப்பை வழங்கும்.
இந்த நல்வரவேற்புக்கு மீண்டும் அரசுத்தலைவருக்கு நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாட்டில் செலவழிக்கப்போகும் இந்த நாள்கள் நட்புறவு, உரையாடல், ஒருமைப்பாடு ஆகியவை நிறைந்த நாள்களாக அமைவதாக. இந்தியப் பெருங்கடலின் முத்தாகிய இலங்கைமீது இறைவனின் ஏராளமான ஆசீரை இறைஞ்சுகிறேன். இந்நாட்டின் அழகு, இதன் வளமையிலும், இந்நாட்டின் அனைத்து மக்களின் அமைதியிலும் ஒளிர்வதாக.
இவ்வாறு இலங்கை விமான நிலையத்தில் ஆற்றிய தனது முதல் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |