2015-01-12 17:12:00

சமயத் தீவிரவாதம் மத உணர்வைச் சிதைக்கின்றது


சன.12,2015. சமயத் தீவிரவாதிகள் மத உணர்வைச் சிதைக்கின்றனர் மற்றும் பயங்கரமானக் குற்றங்களைச் செய்வதற்குக் கடவுளைப் பயன்படுத்துகின்றனர் என்று இந்தியத் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

ப்ரெஞ்ச் சார்லி ஹெப்டோ நையாண்டி வார இதழ் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு எதிராகத் தனது கண்டனத்தை வெளியிட்ட மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இத்தாக்குதலை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று வத்திக்கான் வானொலியில் கூறினார்.

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், 2008ம் ஆண்டில் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் குறிப்பிட்டு, தங்களின் வன்முறையை நியாயப்படுத்த கடவுளைப் பயன்படுத்தும் ஆபத்தான சமய அடிப்படைவாதத்திற்கு நாம் உள்ளாகியிருக்கிறோம் என்றும் கூறினார்.

நாம் எப்போதும் மத உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும், அதேநேரம், ஒரு மத நம்பிக்கையாளர் குழுவில் அதன் உறுப்பினர்கள்மீது முற்சார்பு எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஆபத்துக்கு எதிராக நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் கர்தினால் கிரேசியஸ்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.