2015-01-09 14:59:00

திருத்தந்தை, யஜிதி இனப் பிரதிநிதிகள் குழு சந்திப்பு


சன.09,2015. பிற சிறுபான்மை இனத்தவர் போன்று வன்முறையையும் அடக்குமுறையையும் சந்திக்கும் யஜிதி இனத்தவர்க்கு நீதியும், சுதந்திரமும் அமைதியும் கிடைக்கும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் பல இடங்களில் வாழும் யஜிதி இனத்தவரின் பிரதிநிதி குழுவை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இக்காலத்தில் பல்வேறு துன்ப சோதனைகளை எதிர்கொள்ளும் யஜிதி இன மக்களுடன் ஆன்மீக முறையில் தான் நெருக்கமாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும், இக்குழுவில் ஒருவர் திருத்தந்தையை, ஏழைகளின் தந்தை என அழைத்தார் என்றும், இவ்வின மக்களுக்கு திருத்தந்தை வழங்கிவரும் ஆதரவுக்கு இக்குழுவினர் நன்றி தெரிவித்தனர் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உலகின் யஜிதி இன மக்கள் தலைவர் Tahsin Said Ali Beg, அவ்வினத்தவரின் ஆன்மீகத் தலைவர் Skeikh Kato ஆகிய இருவர் தலைமையிலான குழு திருத்தந்தையைச் சந்தித்தது.  இந்த ஆன்மீகத் தலைவர் Baba Sheikh என அழைக்கப்படுகிறார்.

உலகில் ஏறக்குறைய 15 இலட்சம் யஜிதி இன மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஐந்து இலட்சம் பேர் ஈராக்கிலும், மற்றவர்கள் துருக்கி, ஜார்ஜியா, ஆர்மேனியா, இன்னும் சில பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.