2015-01-09 15:27:00

கருத்துச் சுதந்திரமில்லாத உலகம் ஆபத்தில் உள்ளது, ப்ரெஞ்ச் முஸ்லிம் தலைவர்கள்


சன.09,2015. கருத்துச் சுதந்திரமில்லாத உலகம் ஆபத்தில் வைக்கப்படுகின்றது என்றும், மதங்களை மதிக்கும் தகவல்களை ஊடகங்கள் வழங்க வேண்டுமென்றும் பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் தலைவர்கள் கூறினர்.

ப்ரெஞ்ச் ஆயர்கள் குழுவின் பிரிதிநிதிகளுடன் வந்த ப்ரெஞ்ச் முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று, இரண்டு நாள்கள் வத்திக்கானைப் பார்வையிட்ட பின்னர், திருப்பீட பல்சமய உரையாடல் அவையுடன் இணைந்து இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

பாரிசில் Charlie Hebdo என்ற வார இதழ் அலுவலகத்தின்மீது நடத்தப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், இதில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளது அக்குழு.

அரசியல், மதம், கலாச்சாரம் என்ற பல தலைப்புக்களில் கருத்துக்களை வெளியிட்டுவரும் Charlie Hebdo வார இதழ் அலுவலகத்தின்மீது இப்புதன் நடுப்பகலில் நடத்தப்பட்ட தாக்குதலில், அவ்விதழின் ஆசிரியர் குழுவின் நான்கு பேர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

 ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.