2015-01-09 15:22:00

இலங்கையின் புதிய அரசுத்தலைவர் நியாயமாகச் செயல்படுவார், தலத்திருஅவை நம்பிக்கை


சன.09,2015. இலங்கையில் புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய சனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள், நாட்டினர் அனைவரும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு உதவுவார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

இலங்கையில் இவ்வியாழனன்று நடந்து முடிந்த அரசுத்தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள் 51.28 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது குறித்து வத்திக்கான் வானொலிக்குத் தொலைபேசி பேட்டியளித்த யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் இடம்பெறும் ஆட்சி மாற்றம், நாட்டினர் எல்லாரும், குறிப்பாக தமிழ் மக்கள் சுதந்திரமாகக் கடமைகளை ஆற்றுவதற்கும், ஒற்றுமையாகச் செயல்படுவதற்கும் உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம்.

புதிய அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்களை அவ்வளவாக மக்களுக்குத் தெரியாது என்றும், இவர் தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்றும், ஆயினும், மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்கள் நியாயத்தோடு செயல்படுவதாக உறுதி அளித்திருக்கிறார் என்றும் கூறினார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ்.

இலங்கையின் ஏழாவது அரசுத்தலைவர் தேர்தலில் 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் 57 இலட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகளுடன், 47.58 விழுக்காட்டு வாக்குகளையே ஆளுங்கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ பெற்றுள்ளார்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.