2015-01-08 17:22:00

மருத்துவத்தில் புதிய ஆண்டிபயாடிக் கண்டுபிடிப்பு


சன.08,2015. நீண்ட நாள்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதியவகை ஆண்டிபயாடிக் மருந்து ஒன்றை அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நுண்கிருமிகளை வளர்ப்பதில் அமெரிக்க அறிவியலாளர்கள் கடைப்பிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கின்றன. இதில் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து “மிகவும் நம்பிக்கையளிப்பதாக” அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை.

இந்தப் புதிய கண்டுபிடிப்பு, மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதியவகை ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

1950களிலும் 1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1987ம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை எந்தப் புதிய ஆண்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

 ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.