2015-01-07 16:27:00

லெபனானில் அமைதிப் பணியாற்றும் படைவீரர்களுக்கு வாழ்த்து


சன.07,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதிகாக்கும் இராணுவ அமைப்பின்கீழ், லெபனான் நாட்டில் பணியாற்றும் இத்தாலிய படைவீரர்களை ஊக்கப்படுத்தி தனது ஆசீரை வழங்கும் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருகாட்சிப் பெருவிழாவான இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தி பற்றிக் கூறிய இத்தாலிய இராணுவத்தின் ஆன்மீக வழிகாட்டி ஆயர் Santo Marciano அவர்கள், இராணுவம் ஆற்றிவரும் பணிகளுக்குத் திருஅவை பரிவோடு ஆதரவளிக்க வேண்டுமென்று கூறினார்.

திருஅவை அமைதியைக் கற்றுக்கொடுக்க வேண்டும், அமைதி என்ற கடவுளின் கொடையைப் பெறுவதற்காக இடைவிடாமல் செபிக்க வேண்டும் என்று திருத்தந்தை தொடர்ந்து கூறி வருவதைச் சுட்டிக் காட்டினார் ஆயர் Marciano.

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவைத் துண்டு துண்டாக்கியது என்றும், மத்திய கிழக்கில் நடைபெறும் சண்டைகள் நம் அனைவரையும் அமைதி குறித்து சிந்திக்க வைத்துள்ளன என்றும் திருத்தந்தை அடிக்கடி கூறிவருவதையும் சுட்டிக்காட்டினார் ஆயர் Marciano.

லெபனானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பணியாற்றி வரும் UNIFIL என்ற ஐ.நா. அமைதிப் பணி அமைப்பில், இத்தாலியப் படைவீரர்கள் அதிகம் உள்ளனர் என்றும்  ஆயர் Santo Marciano அவர்கள் கூறினார்

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.