2015-01-07 16:20:00

எபோலா நோயாளியைக் குணப்படுத்திய இத்தாலிய மருத்துவர்களுக்கு திருத்தந்தை பாராட்டு


சன.07,2015. எபோலா உயிர்க்கொல்லி நோய்த் தாக்கிய நோயாளி ஒருவரை இத்தாலிய நலவாழ்வுப் பணியாளர்கள் குணமாக்கியதைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எபோலா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சியெரா லியோன் நாட்டில் அந்நோயாளிகள் மத்தியில் பணிசெய்தபோது அந்நோயால் தாக்கப்பட்ட நேப்பிள்ஸ் மருத்துவர் Fabrizio Pulvirenti அவர்களுக்கு, உரோம் Lazzaro Spalanzani மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, அவர் குணமடைந்துள்ளார்.

இத்தாலிய மருத்துவர்களின் இப்பணியை முன்னிட்டு இத்தாலிய நலவாழ்வு அமைச்சர் Beatrice Lorenzin அவர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மருத்துவர் Pulvirenti அவர்களுக்கு ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளார் என்று Lazzaro மருத்துவமனை கடந்த வெள்ளியன்று அறிவித்தது. மேலும், இந்நோயாளியின் இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்ட நிணநீர் பிற நோயாளிகளைக் குணமாக்குவதற்கு உதவும் என்றும் அம்மருத்துவமனை அறிவித்தது.

2013ம் ஆண்டில் எபோலா நோய்த் தாக்கத் தொடங்கியதிலிருந்து இதுவரை 7905 பேர் இறந்துள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.