2015-01-02 15:13:00

புதிய ஆண்டில் இறைநம்பிக்கையைப் பற்றிக்கொள்ளுங்கள், அயர்லாந்து ஆயர்


சன.02,2015. வருங்காலத்தைப் பற்றிய கலக்கம், அச்சம், கவலை போன்ற உணர்வுகளுக்கு நாம் ஆட்கொள்ளப்படும்போது, இறைவன்மீது நம்பிக்கை, பற்றுறுதி மற்றும் துணிச்சலைப் பற்றிக்கொள்வோம் என்று அயர்லாந்து ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

பிறந்துள்ள 2015ம் ஆண்டுக்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பேராயர் Eamon Martin அவர்கள், இறைவனின் பிரசன்னத்தில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை, 2015ம் ஆண்டு நல்லதோர் ஆண்டாக அமையும் என்ற எண்ணத்தை நம்மில் உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

சனவரி முதல் நாளன்று கத்தோலிக்கத் திருஅவை சிறப்பித்த உலக அமைதி தினத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், மனிதரின் பேராசை, ஊழல் ஆகியவற்றுக்கு இலட்சக்கணக்கான சிறாரும் ஆண்களும், பெண்களும் பலியாகும் நவீன அடிமைத்தனம் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள பேராயர், உலக அளவில் இடம்பெறும் மனித வர்த்தகத்தை நிறுத்துவதற்கு அயர்லாந்து மக்கள் இப்புதிய ஆண்டில் தீர்மானங்கள் எடுக்குமாறும் கேட்டுள்ளார்.

மனித வர்த்தகம், அயர்லாந்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிச் சிந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ள பேராயர் Martin அவர்கள், இப்பிரச்சனை குறித்து தேசிய மற்றும் அனைத்துலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.