2015-01-02 10:29:00

திருத்தந்தை - "இறைவனின் புனித அன்னையே" என அச்சமின்றி அறிக்கையிடுவோம்


சன.01,2015. சனவரி 1, கொண்டாடப்பட்ட "கன்னிமரியா, இறைவனின் அன்னை" பெருவிழா திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை:

அன்பு சகோதர, சகோதரிகளே!

“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (லூக்கா 1: 42-43) என்று எலிசபெத்து, மரியாவை வாழ்த்தியச் சொற்களை நாம் எண்ணிப் பார்க்கிறோம். இறைவன், மோசே, ஆரோன் ஆகியோரின் வழியாக மக்களுக்கு வழங்கிய ஆசீரின் தொடர்ச்சியாக இந்த வாழ்த்துரை அமைந்துள்ளது. “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!” (எண்ணிக்கை நூல் 6: 24-26)

இத்தகைய ஆசீர்களைப் பெற்ற முதல் மனிதப்பிறவி மரியாவே என்பதை, இன்று நாம் கொண்டாடும், 'கன்னிமரியா, இறைவனின் அன்னை' என்ற பெருவிழாவின் வழியாக, திருஅவை நமக்கு நினைவுருத்துகிறது. இறைவனை, மனிதர்கள் காணும் வகையில், அந்த இறைவனுக்கு மனித முகத்தைத் தந்தவர், மரியா.

இறைமகன் இயேசுவும், மரியாவும் பெத்லகேமிலிருந்து, கல்வாரி முடிய இணைபிரியாமல் இருந்தவர்கள். இந்த இணைபிரியா தன்மையால், இறைவனின் தாய் இல்லாமல், நம் மீட்பைப் புரிந்துகொள்வது கடினம். அதேபோல், தாய் திருஅவை இல்லாமல், நமது மீட்பைப் புரிந்துகொள்வது கடினம்.

கிறிஸ்துவின் மீது அன்புகொண்டு, அதேநேரம், திருஅவை மீது அன்புகொள்ளாமல் இருப்பது அர்த்தமற்றது. திருஅவையை ஒதுக்கிவைத்துவிட்டு, கிறிஸ்துவை அணுகுவது, அவரை ஓர் உயிருள்ள ஆளாகக் கருதாமல், ஒரு கருத்தியலாக அணுகுவதற்குச் சமம். திருஅவையை விலக்கிவிட்டு, கிறிஸ்துவை அணுகுவது, மாறும் நமது மனநிலைகளுக்கு ஏற்றவாறு, ஒரு கற்பனையாக, கருத்தாக அவரை அணுகுவதற்குச் சமம்.

இயேசு கிறிஸ்து, நம் ஒவ்வொருவருக்கும், மனித சமுதாயத்திற்கும் ஆசீராக விளங்குகிறார். இந்த இயேசுவை நமக்கு வழங்குவதன் வழியாக, இறைவன் தரும் ஆசீரின் முழுமையை, திருஅவை நமக்கு வழங்குகிறது. இந்த ஆசீரை மனிதர்களுக்குப் பகிர்ந்தளிப்பதே, கிறிஸ்தவர்களாகிய நமது முக்கியப் பணி.

திருஅவைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் மரியா, திருஅவைக்கும், நம் ஒவ்வொருவருக்கும் தாயாக இருக்கிறார். இனிமையும், பராமரிக்கும் தன்மையும் கொண்ட இத்தாய், இறைவனிடமிருந்து மனித குலம் முழுமைக்கும் ஆசீரைப் பெற்றுத் தருவாராக!

குறிப்பாக, இன்று நாம் கொண்டாடும் உலக அமைதி நாளன்று, இந்தத் தாய், நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும், இல்லத்திலும், நாடுகளுக்கிடையிலும், அமைதி என்ற கொடையை இறைவனிடமிருந்து பெற்றுத் தருவாராக!

"இனி ஒருபோதும் அடிமைகள் இல்லை; அனைவரும் உடன்பிறப்புக்களே" என்பதே, உலக அமைதி நாளுக்கென நாம் தேர்ந்துள்ள கருத்து. நாம் அனைவரும் உடன்பிறந்தோர் என்ற பொறுப்புணர்வுடன், இன்றைய உலகில் நிலவும் நவீன அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராட அழைக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு நாடும், கலாச்சாரமும், மதமும் இந்த முயற்சியில் ஒன்றிணையட்டும். நம் அனைவரையும், உடன்பிறப்புக்களாக உருவாக்க, நம் பணியாளராகப் பிறப்பெடுத்த இறைவன் நம்மை வழிநடத்தி, நம் முயற்சியை ஆசீர்வதிப்பாராக!

தன் மறையுரையை இவ்விதம் நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில் ஒரு சில வார்த்தைகளை ஒரு கதைவடிவில் இணைத்தார்:

"எபேசு நகரில் மக்கள் கூடியிருந்தபோது, அவர்களது ஆன்மீக மேய்ப்பர்கள் கோவிலில் நுழைந்ததும், "இறைவனின் புனித அன்னை" என்று மக்கள் குரல் எழுப்பினர். தங்கள் ஆன்மீக மேய்ப்பர்கள், "இறைவனின் அன்னை" என்பதை அறிக்கையிடாவிட்டால் என்ன நடக்கும் என்பதைக் காட்ட, அவர்களில் ஒரு சிலர், தங்கள் கரங்களில் கம்புகள் வைத்திருந்ததைக் காட்டியதாக ஒரு கதை உண்டு; இந்தக் கதை உண்மையா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது" என்று கூறிய திருத்தந்தை அவர்கள், "நாம் இப்போது கரங்களில் கம்புகள் இல்லாமல், எவ்வித அச்சமும் இல்லாமல், மரியாவை இறைவனின் அன்னையென அறிக்கையிடுவோம்" என்று கூறியதோடு, அங்கிருந்தோர் அனைவரையும் எழுந்து நிற்கும்படி கேட்டார். பிறகு, பசிலிக்காப் பேராலயத்தில் கூடியிருந்த அனைவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து, "இறைவனின் புனித அன்னையே" என்று மூன்று முறை அறிக்கையிட்டனர்.  

ஆதாரம்  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.