2014-12-30 15:57:50

திருத்தந்தை பிரான்சிஸ் : நோயாளிகளுடன் செலவழிக்கும் நேரம் புனிதமானது


டிச.30,2014. நோயாளிகளுடன் செலவழிக்கும் நேரம் புனித நேரம், பணிவிடை பெற அல்ல, பணிபுரியவே வந்த தம் மகனின் சாயலில் தம்மை வெளிப்படுத்திய இறைவனைப் புகழுவதாக இது இருக்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
2015ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி சிறப்பிக்கப்படும் 23வது உலக கத்தோலிக்க நோயாளர் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, “பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்: காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்” (யோபு 29,15) என்ற இவ்வுலக தினத்தின் மையப் பொருளை பல கோணங்களில் விளக்கியுள்ளார்.
புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த உலக தினம், நோயால் துன்புறும் மற்றும் துன்புறும் கிறிஸ்துவின் உடலோடு பல்வேறு வழிகளில் ஒன்றித்துள்ள மக்களை நினைத்துப் பார்க்க வைக்கின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை.
“sapientia cordis” அதாவது இதயத்தின் ஞானம் பற்றிய சிந்தனைகளை இச்செய்தியில் வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதயத்தின் ஞானம் பற்றிய ஐந்து கூறுகளை நமக்கு வழங்கியுள்ளார்.
இதயத்தின் ஞானம் என்பது, நம் சகோதர சகோதரிகளுக்குப் பணிவிடை செய்வதாகும், இதயத்தின் ஞானம் என்பது நம் சகோதர சகோதரிகளுடன் இருப்பதாகும், இதயத்தின் ஞானம் என்பது நம்மையே மறந்து நம் சகோதர சகோதரிகளுடன் நேரம் செலவழிப்பதாகும், இதயத்தின் ஞானம் என்பது நம் சகோதர சகோதரிகளைத் தீர்ப்பிடாமல் அவர்களுக்குத் தோழமையுணர்வைக் காட்டுவதாகும் என்று விளக்கியுள்ளார் திருத்தந்தை.
நோயாளிகளின் படுக்கை அருகில் நேரம் செலவழிப்பதில் சிறப்பு மதிப்பு உள்ளது என்பதை அவசரமான இந்த உலகம் அடிக்கடி மறந்து விடுகின்றது என்றும், கடும் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்று சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்றும் கூறினார் திருத்தந்தை.
நோயாளிகளுடன் செலவழிக்கும் நேரத்தின் மதிப்பைப் போற்றுவதற்குத் தூய ஆவியாரிடம் வரம் கேட்போம் என்றும் தனது செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.