2014-12-29 14:53:33

புனிதரும் மனிதரே : பணப் பற்றற்றவர் (St. Anysia)


கிரீஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் தெசலோனிக்கா. தெசலோனிக்கி என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இந்நகரம் சலோனிக்கா என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரில் கி.பி.284ம் ஆண்டில் செல்வந்த, அதேசமயம் பக்தியுள்ள பெற்றோருக்குப் பிறந்தவர் Anysia. பெற்றோர் இறந்த பின்னர் மிக அமைதியாக, தனிமை வாழ்ந்து வந்தார் Anysia. ஏழ்மை, கற்பு ஆகிய வாக்குறுதிகளால் இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்து, தனது செல்வத்தை வைத்து ஏழைகளுக்கு உதவி வந்தார். உரோமைப் பேரரசர் தியோக்ளேசியன்-மாக்சிமியன், கிறிஸ்தவர்க்கு எதிரான மறைக்கலகத்தை கட்டவிழ்த்து விட்டிருந்த காலம் அது. யாரும் எந்தத் தண்டனைக்கும் அஞ்சாமல் கிறிஸ்தவர்களைக் கொலை செய்யலாம் என அவர் அரச ஆணை பிறப்பித்திருந்தார். இந்த ஆணை வெளியான உடனேயே பெரிய, சிறிய நகரங்களிலும், சாலையோரங்களிலும், பல மனித உடல்கள் காணப்பட்டன. இச்சூழலில் ஒருநாள் Anysia ஆலயத்துக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் Anysiaவைச் சந்தித்த உரோமைப் படைவீரர் ஒருவர், Anysiaவை வழிமறித்து அந்நகரில் நடந்துகொண்டிருந்த சூரியக் கடவுள் வழிபாட்டில் கலந்துகொண்டு பலி செலுத்துமாறு வற்புறுத்தினார். Anysia, நாகரீகமாக அந்தப் படைவீரரைவிட்டு விலக முயற்சித்தார். ஆனால் அந்தப் படைவீரரோ Anysiaவின் தலைமுக்காட்டை இழுத்து எறிந்தார். தலைமுக்காடு கற்பு வாக்குறுதியின் அடையாளமாகும். எனவே Anysia அந்தப் படைவீரரின் முகத்தில் துப்பி, எனது ஆண்டவர் இயேசு கிறிஸ்து உன்னை மன்னிப்பாராக என்று சொன்னார். இதில் ஆத்திரமடைந்த அந்தப் படைவீரர் Anysiaவை, Cassandra வாயில்வரை இழுத்துக்கொண்டுபோய் கத்தியால் வெட்டிக் கொன்றார். கி.பி.304ம் ஆண்டில் கொல்லப்பட்ட மறைசாட்சி Anysia விழா டிசம்பர் 30. இவரது விழாவை, கத்தோலிக்கரும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினரும் சிறப்பிக்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.