2014-12-27 14:45:00

மரண தண்டனையை தடை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்


டிச.27,2014. பாகிஸ்தானில் மீண்டும் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள மரண தண்டனையை நிறுத்துமாறு, அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.
பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை, பெஷாவர் இராணுவப் பள்ளி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மரண தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளுக்கு அத்தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையிலும் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களிடம் தொலைபேசியில் பேசிய பான் கி மூன் அவர்கள், மரண தண்டனை வழங்குவதை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இத்தகவலை, ஐ.நா. பொதுச் செயலர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்துள்ளார்.
தற்போது உலகில் 160க்கும் மேற்பட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கையை இரத்து செய்துள்ளன அல்லது அதனை நிறுத்தி வைத்துள்ளன.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.