திருத்தந்தையின் பிலிப்பீன்ஸ் திருத்தூதுப் பயணம், பெரிய சவால்களை முன்வைக்கும்
டிச.27,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற சனவரியில் பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு
மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப் பயணம், அந்நாட்டினருக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும், அதேநேரம்
பெரிய சவால்களையும் முன்வைக்கும் என்று பிலிப்பீன்ஸ் ஆயர் ஒருவர் கூறியுள்ளார். திருத்தந்தையின்
“நற்செய்தியின் மகிழ்வு” (Evangelii Gaudium) திருத்தூது அறிக்கையை மையப்படுத்தி அறிக்கை
வெளியிட்டுள்ள, அந்நாட்டின் Daet மறைமாவட்ட ஆயர் Gilbert A. Garcera அவர்கள் இவ்வாறு
கூறியுள்ளார். பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர் 2014ம் ஆண்டை ஏழைகள் ஆண்டாகக் கடைப்பிடித்து
வருவது பற்றிக் குறிப்பிட்டுள்ள ஆயர் Garcera அவர்கள், அனைத்துக் கிறிஸ்தவர்களும், ஏழைகளின்
விடுதலை மற்றும் முன்னேற்றத்துக்காக உழைக்கும் இறைவனின் கருவிகளாகச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளனர்
என்று கூறியுள்ளார். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோர் மற்றும் நலிந்தோருக்கென இயேசு
கூறும் அன்பு, கருணை, பரிவு ஆகிய செய்தியையே திருத்தந்தை பிலிப்பீன்ஸ் மக்களுக்குக் கொண்டு
வருகிறார், நாம் இவர்களில் கிறிஸ்துவைக் காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், வருகிற சனவரி 15 முதல் 19 வரை பிலிப்பீன்ஸ் நாட்டில் திருத்தூதுப்
பயணம் மேற்கொள்கிறார்.