2014-12-27 14:45:21

இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தில் சிறார்கள்


டிச.27,2014. இலங்கையில் அரசுத்தலைவர் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு, அந்நாட்டின் நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் கழகம் தேர்தல் ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளது.
சிறார்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக பல்வேறு பன்னாட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள இலங்கை அரசு, சிறார்களின் உரிமைகளைக் காப்பதற்கு கடமைப்பட்டுள்ளது என, அக்கழகத் தலைவர் சேனக டி சில்வா தெரிவித்தார்.
தற்போது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பெருமளவிலான சிறார்கள் பயன்படுத்தப்படுவதை ஊடகங்களில் காணமுடிவதாகக் கூறிய வழக்கறிஞர் சேனக டி சில்வா அவர்கள், தேர்தல் விதிமுறைகளின்படி சிறார்களை, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரங்களில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் ஆணையாளரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அரசுத்தலைவர் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்துவதற்கும், கொடிகளை அசைப்பதற்கும் சிறார்கள் பயன்படுத்தப்பட்ட பல நிகழ்வுகள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.