2014-12-27 14:44:37

அருள்பணியாளர்கள் திருமறைப் பணிகளை நிறைவேற்றுவதற்கு மிகவும் ஆபத்தான நாடு மெக்சிகோ


டிச.27,2014. இலத்தீன் அமெரிக்காவில், அருள்பணியாளர்கள் தங்களின் திருமறைப் பணிகளை நிறைவேற்றுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக மெக்சிகோ நாடு உள்ளது என்று ஒரு கத்தோலிக்க ஊடக மையம் வெளியிட்ட ஆய்வு கூறுகிறது.
மெக்சிகோ ஆயர் பேரவை அண்மையில் வெளியிட்ட 2014ம் ஆண்டின் அறிக்கையை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்திய CCM என்ற மையம், கடந்த 24 ஆண்டுகளில் மெக்சிகோ கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக 47 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.
1990ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுவரை மெக்சிகோவில் வன்முறை நடவடிக்கைகளில் ஒரு கர்தினால், 34 அருள்பணியாளர்கள், ஒரு தியாக்கோன், மூன்று துறவியர், 5 பொதுநிலையினர் மற்றும் ஒரு கத்தோலிக்க பத்திரிகையாளர் இறந்துள்ளனர் என்று CCM மையம் கூறுகிறது.
2014ம் ஆண்டில் மட்டும் மூன்று அருள்பணியாளர்களும், ஓர் அருள்பணியாளருக்கு உதவியாகச் சென்ற ஒரு பொதுநிலையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இம்மாதம் 21ம் தேதி குருத்துவக் கல்லூரியிலிருந்து துப்பாக்கிமுனையில் கடத்திச்செல்லப்பட்ட அருள்பணியாளர் Gregorio Lopez Gorostieta அவர்களின் சடலம் கிறிஸ்மஸ் தினத்தன்று Tlapehuala நகராட்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக, Ciudad Altamirano மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
43 ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கடத்தப்பட்டு கடந்த செப்டம்பரில் கொல்லப்பட்ட அதே தென் மெக்சிகோ மாநிலத்தில்தான் இந்த அருள்பணியாளரும் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.