டிச.27,2014. புனித பூமித் திருத்தூதுப் பயணம் உட்பட 2014ம் ஆண்டில் ஐந்து வெளிநாட்டுத்
திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, 2014ம் ஆண்டு சிறப்பான
ஆண்டாக அமைந்ததாக, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி
அவர்கள் கூறினார். 2014ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைத்துவப்
பணி குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறிய அருள்பணி லொம்பார்தி
அவர்கள், 2014ம் ஆண்டில், புனித பூமி, தென் கொரியா, அல்பேனியா, ஸ்டார்ஸ்பூர்க், துருக்கி
ஆகிய இடங்களுக்குத் திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் எனக் கூறினார். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், எருசலேமில் பல கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களைச் சந்தித்தது, கான்ஸ்டான்டிநோபிளிலில்
கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களைச் சந்தித்தது போன்றவை
எதிர்கால கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு நம்பிக்கையின் அடையாளமாக இருந்தன என்றும் கூறினார் அருள்பணி
லொம்பார்தி. வருகிற ஆண்டில் இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளுக்குத் திருத்தந்தை
மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப் பயணங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், மக்கள் தொகையை அதிகமாகக்
கொண்ட ஆசியாவில் பல்வேறு சமூக-அரசியல்-கலாச்சாரங்கள் மத்தியில் நற்செய்தி அறிவிக்கப்பட
வேண்டியதன் முக்கியத்துவத்தை இப்பயணங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் கூறினார். குடும்பம்
குறித்த உலக ஆயர்கள் மாமன்றம், இன்னும், திருத்தந்தைக்கு மிகவும் விருப்பமான அமைதி, நீதி
போன்ற தலைப்புகள், ஏழைகள், பயன்படுத்தப்படும் மக்கள், அடிமைகள், நசுக்கப்படும் கிறிஸ்தவர்கள்
போன்றோர் மீது திருத்தந்தை காட்டும் அக்கறை, அண்மையில் திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கு
திருத்தந்தை ஆற்றிய உரை என திருத்தந்தை குறித்த பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்
அருள்பணி லொம்பார்தி.