2014-12-26 15:16:48

டிச.27,2014. புனிதரும் மனிதரே : இயேசுவின் பாதையில் மன்னிப்பைத் தொடர்ந்த புனித ஸ்தேவான் ( St. Stephen )


ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கு அடுத்த நாள், திரு அவையின் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் திருவிழா சிறப்பிக்கப்படுகின்றது. இயேசுவுக்காக தன் உயிரை கையளித்து, மறைசாட்சிகளின் வரிசையில் முதல் இடம் பெற்ற பெருமையை அடைந்த புனித ஸ்தேவானின் இறப்பு, இயேசுவின் இறப்பைப் போலவே இறைவனின் மன்னிப்பை வேண்டுவதாக அமைந்திருக்கிறது.
இயேசு சிலுவையில் தொங்கியபோது செபித்ததுபோல் புனித ஸ்தேவானும் தன் ஆவியை இறைவனின் கைகளில் ஒப்படைப்பதாகக் கூறி உயிர் விட்டார். அதுமட்டுமல்ல, தன்னைத் துன்புறுத்தியவர்கள் சார்பில் இறைவனிடம் மன்றாடினார். வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும் நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஸ்தேவான் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
கிரேக்க மொழியில் இவரது பெயரின் பொருள் மகுடம் (கிரீடம்) என்பதாகும்.
திருத்தூதர் பணிகளின்படி, தலைமைச் சங்கத்தின் முன் ஸ்தேவானை நிறுத்தி, மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதாக குற்றம் சாட்டினர்.
திருத்தூதர் பணிகள் 6 மற்றும் 7ம் பிரிவுகள் இந்த விசாரணையை விவரிக்கின்றன.
இவரைக் குற்றவாளியாக தீர்ப்பிட்டு, நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர் மேல் கல்லெறிந்தார்கள். இது ஏறத்தாழ கி.பி. 34ம் ஆண்டு எருசலேமில் இடம்பெற்றது. சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் தர்சு நகரைச் சேர்ந்த சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்ததாகவும் திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கின்றோம்.
கி.பி. 415க்கு முன்னர், புனித ஸ்தேவானுடைய பெயரால் பல கோயில்கள் கட்டப்பட்டிருந்தன. எருசலேமிற்கு திருப்பயணம் செய்தபோது, லூசியன் என்னும் குருவுக்கு கிடைக்கப்பெற்ற காட்சியின் படி, இவரது கல்லறை எருசலேமிற்கு வடக்கு பக்கத்திலுள்ள காபார் கமாலா என்னும் ஊரில் இருப்பதாக நம்பப்படுகின்றது.
தூர் நகரின் ஆயரான புனித கிரகரி அவர்கள், பிரான்சில் உள்ள மெட்சு நகரில் ஒரு கோயில் கட்டி, புனித ஸ்தேவானுடைய புனிதப் பொருட்களைப் பாதுகாத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.