2014-12-23 15:26:33

கிறிஸ்மஸ் : பேஷ்வார் படுகொலையில் பலியானவர்களுடன் ஒருமைப்பாடு


டிச.23,2014. பாகிஸ்தானின் பேஷ்வாரில் இடம்பெற்ற படுகொலைகளுக்குப் பலியானவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நாளாக, அந்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாண்டு கிறிஸ்மஸ் அமையும் என்று தலத்திருஅவை கூறியுள்ளது.
பேஷ்வாரில் ஓர் இராணுவப் பள்ளியில் தாலிபான்களால் படுகொலை செய்யப்பட்ட 130க்கும் மேற்பட்ட சிறாருடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, பாகிஸ்தானின் பல ஆலயப் பீடங்களில் இச்சிறாரின் படங்கள் வைக்கப்பட்டு மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் கத்தோலிக்க மனித உரிமை ஆர்வலர் பீட்டர் ஜாக்கப் அவர்கள் பீதெஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள செய்தியில், லாகூரின் 11 பங்குகளில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் எளிமையாகச் சிறப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், கிறிஸ்மஸ் கொண்டுவரும் அமைதி மற்றும் நம்பிக்கை குறித்து சிந்திக்குமாறு கேட்டுள்ளார்.
இதற்கிடையே, குறைந்தது 500 பயங்கரவாதிகளைத் தூக்கிலிடப்போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.