2014-12-23 15:26:24

கட்டாய மதமாற்றம் குறித்த புதிய சட்டத்துக்கு இந்தியக் கர்தினால் எதிர்ப்பு


டிச.23,2014. இந்தியாவில் கட்டாய மதமாற்றங்களைக் கண்காணிப்பதற்குப் புதிய சட்டம் தேவையில்லை என்று கூறியுள்ள அதேவேளை, கட்டாய மதமாற்றங்கள் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள கவலைகளைப் போக்குவதற்கு ஆவன செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்தியுள்ளார் இந்தியக் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்.
இந்திய தேசிய ஒருங்கிணைப்பு அவையின் உறுப்பினரும், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவருமாகிய கர்தினால் கிளீமிஸ் அவர்கள் இத்திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய சட்டம் கொண்டுவரப்படுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சி, முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், இந்நடவடிக்கை அரசியல் அமைப்பால் உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதாக உள்ளது என்றும் கூறி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.
‘Ghar Wapsi’ என்ற பெயரில் இடம்பெறும் மதமாற்ற நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்துள்ள கர்தினால் கிளீமிஸ் அவர்கள், சமயச் சார்பற்ற ஒரு சமுதாயம், கட்டாயத்தாலோ அல்லது தூண்டுதலாலோ மதமாற்றங்களை ஊக்கப்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில், குறிப்பாக, உத்தர பிரதேசம், குஜராத், கேரளா போன்ற பகுதிகளிலிருந்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியூட்டுகின்றன என்றும் கூறியுள்ளார் கர்தினால் கிளீமிஸ்.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.