2014-12-23 15:27:18

இ-வாசகக் கருவிகள் தூக்கத்தையும் நலவாழ்வையும் பாதிக்கின்றன


டிச.23,2014. E-Reader எனப்படும் மின்வாசகக் கருவிகளைப் உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கம், மனிதர்களின் தூக்கத்தைக் கெடுக்கின்றது மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த நலவாழ்வையும் பாதிக்கின்றது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் புத்தகங்கள் படிப்பது பலருக்கும் விருப்பமானதாகவும், அண்மைக் காலமாக புத்தகங்களுக்குப் பதில் மின்னொளி உமிழும் மின்வாசகக் கருவிகளில் இருக்கும் கதை, கட்டுரை அல்லது கவிதையைப் படிக்கும் பழக்கம் உலகெங்கும் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில், தூங்குவதற்கு முன்னர் புத்தகம் படிப்பதற்கும், இ-ரீடர்கள் எனப்படும் மின்வாசகக் கருவியைப் படிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்த ஹாவர்ட் மருத்துவ பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
தூங்கச் செல்வதற்குமுன் இக்கருவியை படிப்பவர்களுக்கு தூக்கம் வருவதற்கு நீண்ட நேரம் எடுப்பதாகவும், அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என்றும் இதன் காரணமாக மறுநாள் காலை அவர்கள் களைப்புடனே கண்விழிப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே மாலை நேரங்களில் கண்களுக்கு நேரடியாகப்படும் ஒளியின் அளவைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.