2014-12-22 16:31:22

திருத்தந்தை : புறம்பேசுதல் என்பது கொலையை ஒத்ததாக உள்ளது


டிச.22,2014. இறைவனின் மகிழ்வுக்குரிய மனிதர்களாக இருக்கும் திருப்பீட அதிகாரிகள், திருஅவைக்குள் நிலவும் சில தீய நிலைகளை ஒழிக்க முயன்று வெற்றிபெறவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும்வண்னம் இத்திங்களன்று திருப்பீட உயர் அதிகாரிகளை சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பதவி அதிகாரத்தை கைப்பற்ற விரும்புதல், இரட்டைவேட வாழ்க்கை, ஆன்மீகத்தை மறந்து வாழும் நோய் போன்றவை குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டார்.
திருப்பீடத்தில் இன்று காணப்படும் பாவங்கள், வரும் புத்தாண்டில் அதற்கான கழுவாய்கள் வழி குணம்பெறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புறம்பேசுதல் என்ற பயங்கரவாதம் நம் உடன் உழைப்பாளர்களை, இரத்தம் உறையவைக்கும் வகையில், கொலைசெய்யவல்லது என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், என்ன விலைகொடுத்தும் பதவிகளைப் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் நிலைகுறித்தும் தன் கண்டனத்தைத் தெரிவித்தார்.
திருப்பீடத்தில் இன்று நிலவும் பாவங்கள் என பதினைந்தை வரிசைப்படுத்தி, விவிலிய மேற்கோள்களுடன் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய பாவங்களின் காயங்கள் குணம்பெற்று, திருஅவையும் திருப்பீடமும் நலமுடன் வாழ ஒவ்வொருவரின் செபத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.