2014-12-20 14:12:23

திருவருகைக்காலம் 4ம் ஞாயிறு ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 ஜெர்மனியின் Strasbourg நகரில், இளம் பேராசிரியர் ஒருவர், தன் அறையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்திருந்த கடிதங்களைப் பிரித்துக் கொண்டிருந்தார். இறையியலிலும், இசையிலும் மேதையாக விளங்கிய அந்த இளம் பேராசிரியருக்கு, பாராட்டுக்களும், அழைப்புக்களும் கடித வடிவில் வந்திருந்தன. அந்தக் கடிதக்கட்டில், ஒரு மாத இதழும் வந்திருந்தது. அந்த மாத இதழ், வேறு ஒருவருக்குச் செல்லவேண்டிய இதழ். தவறுதலாக, இந்த இளம் பேராசிரியரின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அந்த இதழின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டுரை, இளையவரின் கவனத்தை ஈர்த்தது.
"காங்கோ பணித்தளத்தின் தேவைகள்" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரையை அவர் வாசித்தபோது, பின்வரும் வரிகள் அவரைக் கட்டியிழுத்தன: "இங்கு தேவைகள் மிக அதிகம். மத்தியக் காங்கோவின் கபோன் (Gabon) மாநிலத்தில் பணியாற்ற ஒருவரும் இல்லை. நான் இக்கட்டுரையை எழுதும்போது, என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் செபம் ஒன்றே... கடவுள் ஏற்கனவே தேர்ந்துள்ள ஒருவர், இந்த வரிகளை வாசிக்கவேண்டும், அதன் விளைவாக, அவர் எங்களுக்கு உதவிசெய்ய இங்கு வரவேண்டும்." கட்டுரையின் இந்த வரிகளை வாசித்த அந்த இளம் பேராசிரியர், மாத இதழை மூடினார். பின்னர் தனது நாள் குறிப்பேட்டைத் திறந்து, "என் தேடல் முடிவுற்றது" என்று எழுதினார்.
வாழ்வில் நாம் பல தேடல்களில் ஈடுபடுகிறோம். அத்தேடல்களுக்கு பல்வேறு வழிகளில் விடைகள், தீர்வுகள் வந்து சேருகின்றன. இந்தத் தீர்வுகள், பல வேளைகளில் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வடிவத்தில் வந்து சேருவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இளம் பேராசிரியரின் முகவரிக்கு வராத ஒரு மாத இதழ்; அவ்விதழின் ஏதோ ஒரு பக்கத்தில் வெளியான ஒரு கட்டுரை; அக்கட்டுரையில் பதிந்த அவரது கவனம்... இவை யாவும் எதேச்சையாக நடந்தனவா? இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

இயேசு, தன் பணிவாழ்வை 30வது வயதில் துவக்கியதுபோல், தானும் 30வது வயதில், தனக்காக அல்ல, அடுத்தவருக்காக வாழ முயற்சிகள் எடுக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் வாழ்ந்து வந்தார் அந்த இளையவர். அவர் எடுத்திருந்த தீர்மானத்தின் மீது தன் முத்திரையைப் பதிக்க, இறைவன், அந்த மாத இதழ் வழியே அவரைச் சந்திக்க வந்தார். அப்போது அவருக்கு வயது 30. அந்த இளம் பேராசிரியரின் பெயர், Albert Schweitzer. அவரது வாழ்வின் எஞ்சிய 60 ஆண்டுகளை, அவர் ஆப்ரிக்காவில், வறிய மக்கள் நடுவே உழைப்பதற்கென அர்ப்பணித்தார்.
அம்மக்களின் முக்கியத் தேவை, மருத்துவ உதவி என்பதை அறிந்த Albert Schweitzer அவர்கள், அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். இறையியலிலும், இசையிலும் பல புகழ் உச்சிகளை அடைந்திருந்த ஆல்பர்ட் அவர்கள், அந்தச் சிகரங்களிலிருந்து இறங்கி, யாருக்கும் தெரியாத ஆப்ரிக்கக் காட்டில் தன் மருத்துவப் பணிகளைத் துவக்கினார். இதுவே, இறைவன் தனக்குத் தந்த தனிப்பட்ட அழைப்பு என்பதை அவர் முற்றிலும் உணர்ந்தார்.

இறைவன் தந்த அழைப்பு, அந்த அழைப்பு, வாழ்வில் உருவாக்கியத் தலைகீழ் மாற்றங்கள், அந்த மாற்றங்களைத் தொடர்ந்து வந்த பல சவால்கள், துன்பங்கள்... என்ற கோணங்களில், மருத்துவர் Albert Schweitzer அவர்களின் வாழ்வை எண்ணிப்பார்க்க நம்மைத் தூண்டுவது, இன்றைய நற்செய்தி. நாசரேத்து என்ற கிராமத்தில், மரியா என்ற ஓர் இளம்பெண்ணுக்கு இறைவன் தந்த அழைப்பு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.

உலக மீட்பர் பிறக்கப்போகிறார் என்று வானதூதர் கபிரியேல் அன்று சொன்ன செய்தியும், அதற்கு இளம்பெண் மரியா ‘ஆகட்டும்’ என்று சொன்ன பதிலும் இன்று மீட்பின் வரலாறாக, நற்செய்தியாக மாறியுள்ளன. எந்த ஒரு வரலாற்று நிகழ்வும் புத்தகத்தில் பதியும்போது, அந்த நிகழ்வின் அருமை, பெருமைகள் மட்டுமே நம் கண் முன் அதிகம் தோன்றும். அங்கு உண்டான காயங்கள் பெருமளவு மறக்கப்படும்; அல்லது, மறைக்கப்படும்.
விவிலியத்தில் பதிந்துள்ள வரலாற்று நிகழ்வுகளை நாம் திருப்பலியில் வாசகங்களாக வாசிக்கும்போது, மேன்மை, புனிதம் போன்ற உணர்வுகள் அதிகம் மேலோங்குவதால், அந்நிகழ்வுகளின் வேதனைகள், காயங்கள் ஆகியவற்றை நாம் மறந்துவிட வாய்ப்புண்டு. அதனால்தான் இன்று நாம் இப்பகுதியின் இறுதியில், துணிவோடு, "இது இறைவன் வழங்கும் நற்செய்தி" என்று சொன்னோம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், வானதூதர் கபிரியேலுக்கும் இளம்பெண் மரியாவுக்கும் இடையே இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வேளையில், இது நற்செய்தியாக இருந்திருக்க முடியாது என்பதை உணர்வோம்.

கிறிஸ்மஸ் நெருங்கிவரும் இந்நாட்களில், பல பள்ளிகளில், பங்குத்தளங்களில் கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறும். நடிப்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் என்பதால், நாம் இரசிப்போம், சிரிப்போம். இந்த நாடகங்களில், மரியாவுக்கு வானதூதர் தோன்றுவது, மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, பின்னர், மாட்டுத் தொழுவம், இடையர், மூவேந்தர் என்று... அரை மணி நேரத்தில் அழகழகான காட்சிகள் தோன்றி மறையும். இவற்றைப் பார்க்கும்போது மனம் மகிழும். குறிப்பாக, அந்த மங்களவார்த்தை காட்சியில், மரியாவுக்கு வானதூதர் செய்தி சொன்னதும், மரியா உடனே பணிந்து, 'ஆகட்டும்' என்று சொல்வதுபோலவும், வானதூதர் சென்றதும், அவர் தன் வீட்டிலோ, அல்லது, எலிசபெத்து வீட்டிலோ, 'என் ஆன்மா இறைவனைப் புகழ்கிறது' என்ற பாடலை நடனமாடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். மரியாவின் புகழ்பாடலைக் கேட்டு மனம் மகிழ்வோம்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கிறிஸ்மஸ் நாடகம் முடிந்து திரும்பிவரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா?" என்று கேட்டார். அந்தக் கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. வரலாற்றில் நடந்த முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு அழகாக, சுத்தமாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்தச் சூழல் அப்படி. அந்தக் கொடுமையானச் சூழலைப் பற்றி பல கோணங்களில் பேசலாம். நமது இன்றைய சிந்தனைக்கு, ஒரே ஓர் அம்சத்தைப் பற்றி சிந்திப்போம்.

யூதேயா முழுவதும் உரோமைய அடக்குமுறை, அளவுக்கதிகமாக மக்களை வதைத்து வந்தது. இந்த அடக்கு முறையை நிலைநாட்ட, உரோமைய அரசு, படைவீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது, அந்நாட்டில் வாழும் பெண்கள். பகலோ, இரவோ எந்நேரத்திலும், இப்பெண்களுக்கு, படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க, ஐரோப்பிய படைகள் ஆக்ரமித்தபோது, அந்நாட்டுப் பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்துக்களை முற்றிலும் அறிய வாய்ப்பில்லை. ஒன்பது ஆண்டுகள் ஆக்ரமிப்பிற்குப் பின், அமெரிக்க, ஐரோப்பிய படைகள் ஈராக்கை விட்டு வெளியேறியபோது, அந்நாட்டுப் பெண்கள் கட்டாயம் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா. சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையில் வதைக்கப்பட்டதைப்போல் உணர்ந்த மரியா, "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்டமாட்டாயா இறைவா?" என்று தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடை அளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.

இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனைத் தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் கருவுற்றால், அவர்களை ஊருக்கு நடுவே இழுத்துவந்து, கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. தன் தோழிகளில் ஒரு சிலர், உரோமையப் படை வீரர்களின் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்று, ஊருக்கு நடுவே கல்லால் எறியப்பட்டு இறந்ததை மரியா பார்த்திருப்பார். அதையொத்த ஒரு நிலைக்கு தான் தள்ளப்படுவதை மரியா உணர்ந்தார். மணமாகாத தன்னை, தாய்மை நிலைக்கு கடவுள் அழைத்தது, பெரும் இடியாக மரியாவின் செவிகளில் ஒலித்திருக்கும்.
இறைவன் தந்த அந்த அழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும், விருப்பப்பட்டு தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக் கொள்வதும்.. எல்லாம் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை அந்த இளம் பெண்ணுக்கு. 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. தன் வழியாக, தனது சமுதாயத்திற்கும், இந்த உலகிற்கும் மீட்பு வரும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த மரியா, அந்த வாய்ப்புடன் வந்த பேராபத்தைப் பெரிதாக எண்ணாமல், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, 'ஆகட்டும்' என்று பதில் சொன்னார். பெரும் போராட்டத்திற்குப் பின் வந்த பதில் அது.
இன்று நாம் வாசித்த நற்செய்தியின் இறுதியில், நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் என்று மரியா சொல்லும் அந்த வார்த்தைகளே, இந்த முழுப் பகுதியையும் நற்செய்தியாக மாற்றியுள்ளன. இந்த நம்பிக்கை வரிகள் இல்லையெனில், இன்றைய விவிலிய வாசகத்தை ‘நற்செய்தி’ என்று சொல்வது மிகக்கடினம். மரியா சொன்ன 'அப்படியே ஆகட்டும்' என்ற இந்த அற்புத வார்த்தைகள் இத்தனை நூற்றாண்டுகளாக பலருக்கு, பல வழிகளில் நற்செய்தியாக ஒலித்துள்ளன.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அநீதிகளாலும், கொடுமைகளாலும் நொறுக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில், அனைவருமே, அத்துயரங்களைக் கண்டு துவண்டுபோகாமல், அவர்களில் ஒருவர் எடுக்கும் துணிவான ஒரு முடிவு, அந்த சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றியுள்ளது என்பதற்கு, இளம் கிராமத்துப் பெண் மரியா, ஓர் எடுத்துக்காட்டு. மரியாவுக்கு இந்தத் துணிவை அளித்தது, அவரது சொந்த சக்தி அல்ல, மாறாக, இறைவன் மட்டில் அவர் கொண்டிருந்த ஆணித்தரமான, அசைக்கமுடியாத நம்பிக்கை.
இதேபோல், தன் தனிப்பட்ட வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து, அதனால் மனம் வெறுத்து, கொடியப் பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கும் ஒருவர், ஆண்டவன் தரும் ஆயிரம் அழைப்புக்களில் ஒரே ஓர் அழைப்பை உணர்ந்து, 'ஆகட்டும்' என்று ஆண்டவனிடம் சரண் அடையும்போது, அங்கும் புதிய சக்தியும், விடுதலையும் பிறக்கும்.
தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி நமக்குத் தேவை, இறைவனிடம் சரணடையும் பணிவு; தகுந்த முடிவுகள் எடுக்கும் துணிவு. வானதூதர் மரியாவைச் சந்தித்த அந்நிகழ்வில் காணப்படும் பணிவையும், துணிவையும், இந்த கிறிஸ்மஸ் காலத்திலும், புலரும் புத்தாண்டிலும், நாம் அனைவரும் பெற, அன்னை மரியாவின் பரிந்துரையோடு இறைவனை மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.