2014-12-20 16:12:50

திருத்தந்தை பிரான்சிஸ் : அக்கறையற்ற நிலை எனும் மலையை விசுவாசம் நகர்த்தும்


டிச.20,2014. தீமையின் அடிமைத்தனத்திற்கும், பிறரால் பயன்படுத்தப்படும் நிலைக்கும் உட்பட்டிருக்கும் நலிந்தோரின் நல்வாழ்வுக்காக உழைத்துவரும் மக்களை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் திருத்தந்தை 23ம் ஜான் நிறுவனத்தின் உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என ஏறக்குறைய எட்டாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அக்கறையற்ற நிலை எனும் மலையை விசுவாசம் நகர்த்தும் என்று கூறினார். இச்சந்திப்பில் 200 பேர் சக்கர வண்டியில் இருந்தனர். மேலும், பல முதியோரும், 18 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 1800 சிறாரும் இருந்தனர்.
இவ்வமைப்பை நிறுவிய அருள்பணியாளர் ஒரெஸ்தோ பென்சி அவர்களின் நோக்கத்தின்படி தொடர்ந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இறைவனின் இருப்பு, நம் எண்ணங்களையும் நோக்கங்களையும் விரிவுபடுத்துகின்றது என்றும் கூறினார்.
இப்பணியைச் செய்வதற்குச் செபமும் தியானமும் அவசியம் என்றும் கூறிய திருத்தந்தை, நீதியான ஓர் உலகை அமைப்பதற்கு மேலும் தங்களை அர்ப்பணிக்குமாறும் வலியுறுத்தினார்.
பல ஆண்டுகள் இளையோர் மத்தியில் பணியாற்றியதன் பயனாக, 1968ம் ஆண்டில் இத்தாலியின் ரிமினி நகரில் அருள்பணியாளர் ஒரெஸ்தோ பென்சி அவர்கள் திருத்தந்தை 23ம் ஜான் நிறுவனத்தைத் தொடங்கினார். சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், மறக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்குப் பணி செய்வதற்கு இவர் ஊக்கப்படுத்தினார். இன்று இந்நிறுவனத்தின் பணிகள் 34 நாடுகளில் பரவியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.