2014-12-20 16:13:11

கனத்த இதயத்துடன் கிறிஸ்மஸை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது, இந்தியக் கிறிஸ்தவர்கள்


டிச.20,2014. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சத்திஷ்கார், மத்திய பிரதேசம், ஒடிசா, உத்தர பிரதேசம், டில்லி ஆகிய பகுதிகளில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் கனத்த இதயத்துடன் கிறிஸ்மஸை எதிர்நோக்க வைத்துள்ளன என்று இந்திய கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
டில்லியில் புனித செபஸ்தியார் ஆலயம் அழிக்கப்பட்டுள்ளது உட்பட கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறைகள், இந்திய சமுதாயத்தின் மத உணர்வுகளை மட்டுமல்லாமல், அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு உணர்வுகள்மீதும் வெறுப்பைக் காட்டுவதாக உள்ளன என்று, கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
டில்லி பேராயர் அனில் கூட்டோ உட்பட கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், பிரிந்த கிறிஸ்தவ சபைகள் மற்றும் பொதுநிலைத் தலைவர்கள் இணைந்து கையெழுத்திட்டுள்ள அறிக்கையில், நாட்டில் இடம்பெறும் வன்முறைகள் குறித்த கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல அரசியல் தலைவர்கள், தேசிய மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்றும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பாதிக்கும் விவகாரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ள பல்வேறு பாகுபாட்டு மற்றும் வெறுப்புணர்வு நிகழ்வுகள் பற்றிய அறிக்கையை இந்திய அரசுக்குச் சமர்ப்பித்துள்ளனர் ஆயர்கள்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.