2014-12-19 16:15:29

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை தொழிலதிபர் அல்ல, ஆனால் அது ஓர் அன்னை


டிச.19,2014. அதிகாரம் மற்றும் தன்முனைப்பிலிருந்து வருகின்ற ஒரு படைப்பாற்றல் அற்ற நிலை, திருஅவை மற்றும் இறைமக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றது, திருஅவை ஒரு தாய், அது தொழிலதிபர் அல்ல என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிம்சோன், திருமுழுக்கு யோவான் ஆகிய இருவரின் அற்புதமான பிறப்புகள் பற்றி விளக்கும் விவிலிய வாசகங்களை மையமாக வைத்து பிள்ளைப் பேறற்றநிலை, தாய்மை ஆகிய இரு தலைப்புகள் பற்றி, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு உரைத்தார்.
மனிதர் முன்னோக்கிச் செல்வதற்குத் திறனற்று இருப்பதன் அடையாளமாக விவிலியத்தில் பிள்ளைப் பேறற்றநிலை சொல்லப்பட்டுள்ளது, எனவே மனிதரின் இந்நிலை பற்றி திருஅவை நம்மைச் சிந்திக்க வைக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, பிள்ளைப் பேறற்றநிலையிலிருந்து ஒரு புதிய வாழ்வை, ஒரு புதிய குலமரபை இறைவன் மீண்டும் ஆரம்பிக்கிறார் என்று கூறினார்.
சிம்சோன், திருமுழுக்கு யோவான் ஆகிய இருவரின் அன்னையர், தூய ஆவியாரின் செயலால் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர், இவற்றை நம்மால் செய்ய இயலாது என்பதால் நாம் தூய ஆவியாருக்குத் திறந்த மனதுடன் இருக்க வேண்டும், இறைவனின் புதிய செயல்களுக்கு நாம் மனந்திறந்தவர்களாய் இருக்க வேண்டுமென்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவைக்குள் தாய்மைப் பண்புக்கும், வளமையான நிலைக்கும் இறைவனிடம் வரம் கேட்போம். ஏனெனில் அன்னை மரியா போன்று, திருஅவை, எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.