2014-12-19 16:15:16

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும் அன்புச் செய்தியைக் கொண்டுவருகின்றன


டிச.19,2014. கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும் உடன்பிறப்பு உணர்வு, நெருங்கிய உறவு, நட்பு ஆகியவை பற்றிப் பேசுவதால், இவை அனைத்து இதயங்களுக்கும், மத நம்பிக்கையற்றவர்களுக்கும்கூட மிகவும் விருப்பமாக உள்ளன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு மிகவும் விருப்பமான கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும், எளிமை, பகிர்வு, தோழமை ஆகியவற்றின் அழகையும் கண்டுணருவதற்கு இக்காலத்திய மனிதரை அழைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான கிறிஸ்மஸ் குடிலையும், அதில் வைக்கப்பட்டுள்ள திருஉருவங்களையும், கிறிஸ்மஸ் மரத்தையும் வழங்கியுள்ள இத்தாலிய நகரங்களின் 250 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
நமது தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில் ஒற்றுமை, நல்லிணக்கம், அமைதி ஆகியவற்றை வளர்ப்பதற்கு கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும் அழைப்பு விடுக்கின்றன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கொடைகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.
இறைவன் ஒரு சிறு குழந்தை வடிவில் தமது எல்லாம் வல்ல அன்பை நமக்குப் பொழிகிறார் என்றும், கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும் ஒளி, நம்பிக்கை மற்றும் அன்புச் செய்தியைக் கொண்டுவருகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வட இத்தாலியின் வெரோனா நகர அரேனா அமைப்பு, கிறிஸ்மஸ் குடிலையும், அதில் வைக்கப்பட்டுள்ள திருஉருவங்களையும், தென் இத்தாலியின் கத்தான்சாரோ நகராட்சி, 70 வயதுடைய கிறிஸ்மஸ் மரத்தையும் வழங்கியுள்ளன.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான கிறிஸ்மஸ் குடில், இவ்வெள்ளி மாலை திறக்கப்பட்டுள்ளது. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் பெரிய அளவிலான கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும் வைக்கப்படும் பழக்கம் 1982ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.