2014-12-18 15:33:32

திருத்தந்தை : வரலாற்றில் நாம் தவறுகள் செய்யும்போது, அவற்றை இறைவன் சரியாக்குகிறார்


டிச.18,2014. மிகுந்த இருள் சூழ்ந்த நேரங்களிலும், இறைவனின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள இயலாத நேரங்களிலும் இறைவனை நம்பவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நம்மைக் காப்பது ஒன்றே, மனித வரலாற்றில், இறைவனின் திருவுளமாக அமைந்தது என்று கூறினார்.
இறைவனும், நாமும் இணைந்து உருவாக்கும் வரலாற்றில், நாம் தவறுகள் செய்யும்போது, அவற்றை இறைவன் சரியாக்குகிறார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் இச்செயல்பாடுகள் நமக்குத் தெளிவாகத் தெரியாதபோதும், அவர் வரலாற்றில் நம்முடன் தொடர்ந்து நடப்பதை நம்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இறைவன் வரலாற்றில் நம்முடன் பயணிப்பதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால், கிறிஸ்து பிறப்பு என்ற மறையுண்மையையும் நம்மால் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
இறைவனின் செயல்பாடுகளைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறிய புனித யோசேப்பு அவர்களை இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம் என்பதைக் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரலாற்றை வடிவமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித யோசேப்பு, இறைவன் தந்த பாரத்தையும் சுமக்க வேண்டியதாயிற்று என்று கூறினார்.
முற்றிலும் புரிந்துகொள்ள முடியாதச் சூழலிலும், இறைவன் விடுத்த அழைப்பை ஏற்ற புனித யோசேப்பு அவர்கள், தன் கனவிலிருந்து விழித்ததும், இறைவனின் திருவுளத்தைச் செயல்படுத்தினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.