2014-12-18 15:36:29

ஜெர்மன் எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபை உறுப்பினர்களுடன் திருத்தந்தை சந்திப்பு


டிச.18,2014. "கடவுளும், மனித மாண்பும்" என்ற அறிக்கையை, ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவையும், ஜெர்மன் எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபையும் இணைந்து உருவாக்கிவருவதைக் கேள்விப்பட்டு மகிழ்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜெர்மன் கத்தோலிக்க ஆயர் பேரவை உறுப்பினர்களும், ஜெர்மன் எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபையின் உறுப்பினர்களும் இணைந்து உரோம் நகரில் மேற்கொண்டுள்ள பயணத்தின் ஒரு பகுதியாக, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது, திருத்தந்தை தன் மகிழ்வை இவ்வகையில் வெளியிட்டார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பை மையப்படுத்தி, கத்தோலிக்கர்களும், எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபையினரும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.
திருஅவையில் மாற்றங்கள் என்ற முயற்சியை லூத்தரன் சபையினர் துவங்கி, 5ம் நூற்றாண்டு நடைபெறும் இவ்வேளையில், இவ்விரு சபைகளும் வெற்றி, தோல்வி என்ற கருத்துக்களைக் கொண்டாடாமல், இருவரும் அறிக்கையிடும் ஒரே கடவுளின் விசுவாசத்தைக் கொண்டாடுவதே சிறந்த வழி என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
ஒருவர் ஒருவர் மீது கொள்ளும் உண்மையான மதிப்பிலும், ஒருங்கிணைப்பு நோக்கி எடுக்கப்படும் உறுதியான ஆர்வத்திலும் ஜெர்மன் நாட்டு கத்தோலிக்கர்களும், எவாஞ்செலிக்கல் லூத்தரன் சபையினரும் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற வாழ்த்தையும், ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.