2014-12-18 15:35:33

அமெரிக்க ஐக்கிய நாடு, கியூபா அரசுத் தலைவர்கள், திருத்தந்தைக்கு சிறப்பான நன்றியைக் கூறியுள்ளனர்


டிச.18,2014. பாலங்களைக் கட்டுவதும், அமைதியை வளர்ப்பதும் திருத்தந்தையர் ஆற்றவேண்டிய பணி; அதனை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புறச் செய்துள்ளார் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் பொறுப்பாளர்களில் ஒருவரான பேராயர் Thomas Wenski அவர்கள் கூறினார்.
கியூபா நாட்டுடன் அமெரிக்க ஐக்கிய நாடு உறவுகளை உறுதிப்படுத்தும் என்று அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் இப்புதனன்று தெரிவித்ததையடுத்து, அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி, மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர் பேராயர் Wenski அவர்கள், இவ்வாறு கூறினார்.
இருநாட்டு அரசுத் தலைவர்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு சிறப்பான நன்றியைக் கூறியிருப்பதையும் பேராயர் Wenski அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
அமைதியின் தூதர் என்று அழைக்கப்படும் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்நாட்களில் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்துடன் எகிப்து நாட்டு Sultan al Kamil அவர்களைச் சந்தித்ததை பேராயர் Wenski அவர்கள், தன் அறிக்கையில் குறிப்பிட்டு, அப்புனிதரின் பெயரைத் தாங்கியத் திருத்தந்தை அவர்கள், அமைதியை நிலைநாட்டும் கருவியாகச் செயல்படுவது வியப்பளிக்கவில்லை என்று கூறினார்.
கியூபா நாட்டின் மீது அமெரிக்க ஐக்கிய நாடு விதித்திருந்த தடைகளால், அந்நாட்டு அப்பாவி மக்களே பெரிதும் துன்புற்றனர் என்பதை இரு நாடுகளின் தலத்திருஅவைகலும் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளன என்று கூறிய பேராயர் Wenski அவர்கள், இவ்விரு நாடுகளுக்கும் இடையே முழுமையான உறவுகள் வளர இரு நாட்டு அரசுகளும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.