2014-12-17 16:27:55

மத வன்முறைகளை நிறுத்த ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விவாதம்


டிச.17,2014. மதங்களைக் காரணம் காட்டி மேற்கொள்ளப்படும் அர்த்தமற்ற வன்முறைகளுக்கு எதிராக அனைத்து மதத் தலைவர்களும், அரசுகளும் குரல் கொடுக்கவேண்டும் என்ற விண்ணப்பம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.
'2014ம் ஆண்டு, உலகின் மதச் சுதந்திரம்' என்ற தலைப்பில், Aid to the Church in Need (ACN) என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு தயாரித்த ஓர் அறிக்கையை, அவ்வமைப்பின் சார்பாக Peter Sefton-Williams அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வெளியிட்டபோது, இந்த விண்ணப்பமும் வெளியானது.
இவ்வறிக்கையைத் தொடர்ந்து, மதச் சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியா, லெபனான், எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், தங்கள் நாட்டில் நிலவும் உண்மை நிலையை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
Boko Haram என்ற வன்முறையாளர்களின் பிடியில் சிக்கியிருக்கும் நைஜீரியாவைக் குறித்து, அந்நாட்டின் ஆயர் Stephen Dami Mazma அவர்கள் பேசுகையில், Boko Haram கொண்டுள்ள அடிப்படைவாதக் கொள்கைகள், இஸ்லாமியக் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானவை என்று அந்நாட்டில் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள் கூறுவதைச் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் சார்பில் பேசிய Paul Bhatti அவர்கள், வளரும் தலைமுறையினருக்கு இஸ்லாம் மதத்தைக் குறித்த சரியான புரிதலை உருவாக்க, தங்கள் நாட்டில் தகுதியான கல்விக்கு முதன்மை இடம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.