2014-12-17 16:21:31

பாகிஸ்தானில் பச்சிளம் குழந்தைகள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருப்பது, ஆழ்ந்த வேதனையைத் தருகிறது - கர்தினால் கிரேசியஸ்


டிச.17,2014. அண்மை நாடான பாகிஸ்தானில் எப்பாவமும் அறியா பச்சிளம் குழந்தைகள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருப்பது, ஆழ்ந்த வேதனையைத் தருகிறது என்று, ஆசிய ஆயர்கள் ஒன்றியத்தின் தலைவராகிய கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
7 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியருக்கென, பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இயங்கிவந்த பள்ளியொன்றில் Tehreek-e-Taliban Pakistan (TTP) எனப்படும் தீவிரவாத அமைப்பினர் மேற்கொண்ட வெறித்தனமான தாக்குதலில், 132 குழந்தைகளும், 9 ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அர்த்தமற்ற இந்த வெறித்தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, இந்தியத் திருஅவை தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவிப்பதாக கர்தினால் கிரேசியஸ் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.
கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவையொட்டி இப்புதனன்று துவங்கும் நவநாள் செபங்களில், இந்தியாவில் பயிலும் மாணவ, மாணவியர், பாகிஸ்தானில் இறந்த மாணவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காவும், உலக அமைதிக்காகவும், செபிக்குமாறு கர்தினால் கிரேசியஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில், அடிப்படைவாதப் போக்குடைய தாலிபான்களின் தாக்குதல்களால் 2007ம் ஆண்டு முதல், 6,800க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.
பெஷாவர் பள்ளியில் நடைபெற்ற இந்த வெறித்தாக்குதல் குறித்து, ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் அமைப்பு உட்பட, உலகின் பல நாடுகளும், மத அமைப்புக்களும் தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.