2014-12-17 15:54:53

திருத்தந்தையின் புதன் பொது மறையுரை


டிச.17,2014. 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன்கிழமை வரை 73 புதன் பொது மறையுரைகளை நிகழ்த்தியுள்ளார். 2014ம் ஆண்டில் திருத்தந்தை நிகழ்த்தியுள்ள 43 இம்மறையுரைகளில், 11 இலட்சத்து 99 ஆயிரம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். டிசம்பர் 17, இப்புதன் பொது மறையுரை, 2014ம் ஆண்டின் இறுதி பொது மறையுரையாகும். அடுத்த புதன் பொது மறையுரை, 2015ம் ஆண்டு சனவரி 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களாக உரோம் நகரில் மழை பெய்துகொண்டிருந்தது. ஆனால் இப்புதன் காலையில் வானம் கார்மேகமின்றி, கதிரவனின் கதிர்கள் பளிச்சென்று வீசிக்கொண்டிருந்தன. இச்சூழலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, குடும்பம் குறித்த மறையுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்புச் சகோதர, சகோதரிகளே, உலகிலும், திருஅவையிலும் குடும்பத்தின் அழைப்பும் பணியும் பற்றி, வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, நம் புதன்கிழமை பொது மறையுரைகள் குடும்பத்தைப் பற்றியதாக அமையும். இத்திருவருகைக் காலத்தில் நம் ஆண்டவரின் திருவருகைக்காகச் செபச் சூழலில் அவரை எதிர்பார்க்கிறோம். இறைவனின் உண்மையான கொடையாகிய குடும்பம், கிறிஸ்து மனுவுருவானப் பேருண்மையில் எவ்வாறு இடம்பெறுகிறது என்பதையும், உறுதிசெய்யப்படுகிறது என்பதையும் சிந்திப்பதற்கு இத்திருவருகைக் காலம் நம்மை அழைக்கின்றது. இறைமகன் தாம் பிறப்பதற்கு, உரோமையப் பேரரசின் புற எல்லையில் புகழ்பெறாத ஒரு நகரில், மனிதக் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தார். இறைமகனின் முதல் முப்பது வருட வாழ்வு பற்றி நற்செய்திகள் சிறிதளவே நமக்குக் கூறினாலும், இயேசு மிகச் சாதாரண குடும்ப வாழ்வை நடத்தினார் என்று நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. அவர் பக்திச் சூழலில் வளர்க்கப்பட்டார். மரியா, யோசேப்பு ஆகிய இருவரின் வார்த்தைகள் மற்றும் எடுத்துக்காட்டுகளிலிருந்து கற்றுக்கொண்டார். அவர் ஞானத்திலும், வயதிலும், அருளிலும் வளர்ந்தார் (லூக்.2,52). திருக்குடும்பத்தைப் பின்பற்றி, ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும், தனது வீட்டில் இயேசுவுக்காக இடம் அமைக்க வேண்டும். இத்தகைய சாதாரணக் குடும்பங்களின் அன்பு வழியாக, இறைமகன் நம் மத்தியில் அமைதியாக வந்து குடிகொள்கிறார், நம் உலகுக்கு மீட்பைக் கொணர்கிறார். இவ்வாறு புதன் பொது மறையுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்பொது மறையுரையின் இறுதியில் பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை, கிறிஸ்மஸ் நெருங்கிவரும் இக்காலத்தில், நம் ஆண்டவர் இயேசுவின் மகிழ்வும் அமைதியும் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நிறைப்பதாக என்று சொல்லி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும், பாகிஸ்தானின் பேஷ்வார் நகரிலும் கடந்த நாள்களில் நடந்த மனிதமற்ற, பயங்கரவாதச் செயல்களுக்குப் பலியானவர்களுக்காக உங்கள் அனைவரோடும் சேர்ந்து செபிக்க விரும்புகிறேன்; இறந்தவர்களுக்கு நிறை சாந்தியையும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும், வன்முறையாளர்களின் இதயங்களுக்கு மனமாற்றத்தையும் இறைவன் வழங்குமாறு செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.